மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த 700 பேரும் ஏற்கெனவே ராணுவ அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த 1,700+ உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. அங்கு நிலவும் ராணுவ ஆட்சியால் போதிய வசதிகள் இல்லாமல் மீட்புப் பணி சுணக்கம் கண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் ரமலான் நோன்பை ஒட்டி தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக மியான்மர் ‘ஸ்ப்ரிங் ரெவல்யூஷன் முஸ்லிம் நெட்வொர்க்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த 700 பேரும் ஏற்கெனவே ராணுவ அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த 1700+ உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அரசு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் டுன் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இதுவரை 1,644 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 3,400 பேர் காயமடைந்துள்ளனர். 300 பேரைக் காணவில்லை.” என்றார்.
இதற்கிடையில், மியான்மரில் ஆளும் ராணுவத் தலைமை ஒரு வார காலம் தேசிய துக்க காலமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. மியான்மரின் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக 8 மில்லியன் டாலர் (6.2 மில்லிடன் யூரோ) நிதி தேவைப்படும் என்று கணித்துள்ள ஐ.நா., உலக நாடுகள் தாராளமாக உதவக் கோரியுள்ளது. ஏற்கெனவே உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள மியான்மர் தற்போது நிலநடுக்கத்தால் மனிதாபிமான நெருக்கடியில் இருக்கிறது. மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லாமல் தெருக்களில் சிகிச்சைகள் நடைபெறுவதும், சடலங்களில் இருந்து வீசும் துர்நாற்றமும் சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை துயரங்களுக்கு இடையில், மியான்மரின் ராணுவ அரசு, அந்நாட்டின் கிளர்ச்சிப் படைகள் மீது வான்வழித் தாக்குதலை தொடர்ந்து வருகிறது கவனிக்கத்தக்கது.
மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அங்கு போதிய வசதிகள் இல்லை. இதனால் உள்ளூர் மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றி உள்ளே யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். இதனிடையே, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து சென்றுள்ள மீட்பு குழுவினர் ஒரு சில இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு இரு தினங்களுக்கு மேல் ஆவதால் கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தோர் மியான்மர் மருத்துவமனையில் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தங்கியுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் போராடி வருகின்றனர். இணைய சேவை மற்றும் போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
4 பேர் உயிருடன் மீட்பு: மண்டாலே நகரில் ஸ்கை வில்லா குடியிருப்பில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றனர். இந்நிலையில் மண்டாலேவில் நடந்த மீட்புப் பணியில் சீன குழுவினர் ஒரு கர்ப்பிணிப் பெண், ஒரு குழந்தை உள்பட 4 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சீன தேசிய ஊடகமான சினுவா செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நிலவரம்: மியான்மர் நிலவரம் இப்படியென்றால் தாய்லாந்தில் இதுவரை 19 உயிரிழப்புகளை அரசு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் சிக்கியுள்ள 75 பணியாளர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. பாங்காக் ஆளுநர், கட்டிடத்தின் கீழ் கட்டுமானப் பணியாளர்கள் இன்னும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக நம்புவதாகக் கூறியுள்ளார்.