முத்து காமிக்ஸ்: "சினிமாவில் விருது வாங்கும்போது கூட கிடைக்காத சந்தோஷம் அது" – நெகிழும் பொன்வண்ணன்

கதை சொல்லலில் எத்தனையோ நவீன கலை வடிவங்கள் வந்தாலும் சுவாரஸ்யமும் கற்பனையும் சித்திரமும் செழித்துக்கிடக்கும் ஒரு கலைவடிவம் காமிக்ஸ்.

தமிழில் காமிக்ஸ்களை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவரான முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தர பாண்டியன் சமீபத்தில் காலமானார்.

அவரது மரணத்தை ஒட்டி சென்னையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில் காமிக்ஸ் எழுத்தாளர் கிங் விஸ்வா, நடிகர் பொன்வண்ணன், வைட் ஆங்கிள் ரவிசங்கர், யுவகிருஷ்ணா, ஜா. ராஜகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் பொன்வண்ணன் இந்த நிகழ்வில், சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்கள் தன்மீது எவ்வளவு தாக்கம் செலுத்தியது என்பது குறித்தும் தனக்கும் முத்து காமிக்ஸ் புத்தகங்களுக்குமான நெருக்கம் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.

நினைவேந்தல்

அவர் பேசியதாவது,

90 பைசாக்குப் புத்தகம் வாங்கினோம்

“நான் கடந்து வந்த 53 வருட வாழ்க்கையில் பல உறவுகள், நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் நான் படித்த எழுத்தாளர்களை இன்று படிப்பதில்லை.

என் அறிவு முதிர்ச்சியால் அடுத்தடுத்த படைப்புகளுக்கு மாறிவிட்டேன். இப்படி எதுவுமே தொடர்ச்சியாக என்னுடன் இருந்ததில்லை. எல்லாமும் விடுபட்டுப் போயிருக்கிறது.

மூத்தவர், முகம் தெரியாமல் என்னைத் தூண்டியவர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் என்னுடன் விடுபட்டுப்போகாமல் தொடர்ச்சியாக இருந்துள்ளார்.

10 வயதில் அவருடைய படைப்பு எனக்கு அறிமுகமானது. அப்போது அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது.

அந்த காலத்தில் ஒரு குழந்தைக்கு மிட்டாய் வாங்கக் கொடுக்கும் 5,10 பைசாக்களைச் சேர்த்து வைத்து ஒரு புத்தகம் வாங்க முடியுமென்றால் 90 பைசாக்கு வாங்கலாம். அப்படி 90 பைசாக்கு அவர் புத்தகத்தை வாங்கிய குழந்தைகளில் நானும் ஒருவன்.

இன்று முத்து காமிக்ஸ் புத்தகங்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துவிட்டது. ஆனாலும், முதல் 5 புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்துகிறோம்.

அந்த புத்தகங்கள் என் சொந்தத்தையும் என் மண்ணையும் என் பால்யத்தையும் மொத்தமாகக் கிளறிவிட்டன. அந்தக் காலத்தில் காமிக்ஸ் மீது பைத்தியமாக இருந்தோம்.

குழந்தைப் பருவம் முக்கியமானது

எனக்கு ஈரோடு பக்கம் ஒரு கிராமம். அப்பா அதிகமாக ஈரோடு நகரத்துக்குக் கூட்டிப் போவதே இல்லை.

ஈரோட்டில் பஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு கடையில்தான் முத்து காமிக்ஸ் கிடைக்கும். ஆனால் பிளாட்பாரத்தில் அட்டைகள் கிழிந்துபோன புத்தகங்கள் கிடைக்கும். அவற்றைத்தான் என்னால் வாங்க முடிந்தது.

irumbu kai mayavi

இன்றும் என் நூலகத்தில் ஆயிரம் புத்தகங்கள் நடுவில், யாருடைய இன்சியல் போட்டிருக்கும் அந்த அட்டைகள் கிழிந்த புத்தகத்துக்குத் தனியாக ஒரு ரேக் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.

அந்த ரேக் அருகில் செல்லும்போது கிடைக்கும் சந்தோஷம், சினிமாவில் விருது வாங்கும்போது கூட கிடைக்காது. இன்றைக்கு நான் இவ்வளவு உணர்வுப்பூர்வமாகப் பேசுவது சௌந்தரபாண்டியன் என்றோ, எங்கோ கண்ட கனவு.

அவர் மறைந்துவிட்டாலும் என் சொந்த நினைவுகள் வழியாக என்னுள் தங்கியிருக்கிறார். இவ்வளவு நெருக்கமாக எனக்கு யாரும் கிடையாது. ஏனென்றால் குழந்தைப் பருவம் அத்தனை முக்கியமானதாக உள்ளது.

இந்த வயதில் என் ஞாபகத்தில் அடிக்கடி வருபவை, எத்தனை முறை நினைத்துப் பார்த்தாலும் சுவாரஸ்யமாக இருப்பவை, நான் அடிக்கடி பகிரும் விஷயங்கள், நான் மீண்டும் பார்க்க நினைக்கும் விஷயங்கள் எல்லாமும் சிறுவயதில்தான் இருக்கின்றன.

20 வயதுக்குள் வாழ்ந்த வாழ்க்கை மட்டும்தான் வாழ்க்கையாக இருக்கிறது.

மற்ற எல்லாமும் ரிப்பீட்டாக நடப்பவைதான், அதற்கு கணக்கு வழக்கே இல்லை. புகழுக்காகப் பணத்துக்காக ஏதோ ஒரு வாழ்க்கை ஓட்டத்துக்காக அளவிடப்படுகிறதே தவிர உணர்வு ரீதியாக ஒன்றுமே இல்லை.

ஒரு மனிதன் இறுதிவரை தனக்குள் லூப் செய்து ஓட்டிப்பார்க்கும் உணர்வுகள் எல்லாமும் 20 வயதுக்கு உட்பட்டதுதான்.

பொன்வண்ணன்

முத்து காமிக்ஸ் அலுவலகம் சென்ற தருணம்

எந்த ஒரு நினைவுக்கூட்டத்திலும் இப்படி அமர்ந்து என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது. உணர்வுப்பூர்வமாக என்னுடனேயே பயணித்த ஒருவர் என்பதனால் இந்த நிகழ்வு எனக்கு மிக மிக நெருக்கமானது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி அருகே ஒரு படப்பிடிப்பு நடந்தது. அங்கிருந்து முத்து காமிக்ஸ் அலுவலகத்துக்குச் சென்றேன். சௌந்தர பாண்டியன் ஐயாவைச் சந்தித்தேன்.

முத்து காமிக்ஸ் அலுவலகம் பற்றி எனக்குப் பல பிரமிப்பான கற்பனைகள் இருந்தன. ஜேம்ஸ் பாண்ட், மாயாவி கதைகளில் வருவதுபோல பெரிய ஃபாக்டரி இருக்கும் என நினைத்தேன்.

ஆனால் மிக அமைதியான தெருவில், புத்தகங்கள் அடுக்கப்பட்டு, சாதாரண மேசை நாற்காலிகளுடன்… எனக்கு ஏமாற்றமாக இல்லை, ஆனால் புதிதாக இருந்தது.

அன்று நான் முத்து காமிக்ஸில் பழகிய நண்பர்கள், இன்றும் புத்தகத் திருவிழாக்களில் எனக்காக ஒரு புத்தகங்கள் எடுத்துவைத்து விடுகிறார்கள்.

நான் புத்தகத் திருவிழா சென்றாலும் மறக்காமல் செல்கிற ஒரே கடை முத்து காமிக்ஸ்தான்.

புத்தகத் திருவிழாவில் சென்று முத்து காமிக்ஸ் வாங்குவது, என் வாழ்க்கையைத் திரும்ப வாழ்வது போன்றது. எனக்குச் சௌந்தர பாண்டியன் ஐயா மறைந்ததில் துளியும் வருத்தம் இல்லை, ஏனென்றால் அவர் நம் நினைவுகளில் வாழ்கிறார்” என்று பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.