புதுச்சேரி: ரவுடிகள், குற்றவாளிகளை மதுக்கடையில் வேலைக்கு வைக்கக் கூடாது என்று கலால் விதிகளில் திருத்தம் செய்த அரசாணை புதுச்சேரியில் விரைவில் அமலாகிறது.
புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபான கடைகள், ரெஸ்ட்ரோ பார்களுக்கு கலால் துறை அனுமதி தந்துள்ளது. இங்கு குற்றவாளிகள், ரவுடிகள் வேலைக்கு வைப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் அரசுக்குச் சென்றன. சுற்றுலா பயணிகளிடம் மோதலும் ஏற்பட்டதாக போலீஸுக்கு புகார்கள் சென்றனர். சில மதுபானக் கடைகளில் உரிமையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களை ஊக்கப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கலால் துறை விதிகளை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கலால் துறை மற்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி புதுச்சேரி கலால்விதி 1970-ன்படி விதி 14-ல் துணை விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி மதுபானக்கடை உரிமதாரர் அல்லது அனுமதி வைத்திருப்போர் சட்ட விதிகள் படி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட எவரையும் பணியமர்த்தக் கூடாது.கலால் துறை செயலர் ஆஷிஷ் மதோராவ் மோர் இந்த ஆணையை அனுமதித்துள்ளார். இந்த உத்தரவு அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிட்ட பிறகு விரைவில் அமலுக்கு வரும்” என்றனர்.