ருதுராஜ் கெய்க்வாட்டின் சுயநலத்தால் தோற்கும் சிஎஸ்கே?? – இந்த வருஷம் கப் கிடையாது…

Chennai Super Kings: “கடந்த சில வருடங்களாக அஜிங்க்யா ரஹானே நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்தார். அம்பதி ராயுடு மிடில் ஓவர்களை கவனித்துக் கொண்டார். நான் மிடில் ஓவர்களை கவனிக்க கொஞ்சம் தாமதமாக வந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம், திரிபாதியால் தொடக்கக் கட்ட ஓவர்களில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய முடியும்.

மெகா ஏலத்தின் போதே இது முடிவு செய்யப்பட்டது, அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவைப்படும்போது நான் ரிஸ்க் எடுத்து ஸ்ட்ரைக் ரோடேட் செய்ய முடியும். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை, ஆனால் அது கிடைத்தவுடன் காட்சிகள் மாறலாம்” இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad), தான் ஏன் நம்பர் 3 ஸ்பாட்டில் இறங்குகிறேன் என்பதற்கு அவரே அளித்த விளக்கம்.

Chennai Super Kings: மோசமான ஓபனிங்

நம்பர் 3 ஸ்பாட் மிக முக்கியமான ஒன்றுதான், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் எந்த சீசனில் எல்லாம் ஓபனிங்கில் அதிக ரன்கள் அடிக்கப்படுகிறதா, அந்த சீசனில் எல்லாம் சிஎஸ்கே சிறப்பாக விளையாடியிருக்கிறது. கோப்பை வென்ற அனைத்து சீசன்களிலும் ஓபனர்கள் ரன்களை குவித்திருப்பார்கள். ஆனால், கடந்த மூன்று போட்டிகளிலும் ஓபனிங்கும் சரி, பவர்பிளே பேட்டிங்கும் சரி மிக மிக மோசமாக இருக்கிறது.

Chennai Super Kings: நம்பர் 3இல் இளம் வீரர்

ருதுராஜ் கெய்க்வாட்டும், ரச்சின் ரவீந்திராவும் நல்ல ரிதமில் இருக்கிறார்கள். டெவான் கான்வே பெரிய ஃபார்மில் இல்லையென கூறப்படும் நிலையில், அவர் பிளேயிங் லெவனில் எடுப்பதும் சரியான முடிவு இல்லைதான். ஆனால் அதற்கு ராகுல் திரிபாதியை ஒப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரால் 140+ வேகத்தில் வரும் பந்துகளை டைம் செய்ய இயலவில்லை. அவரது பேட்டிங் நுட்பமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நிலையில், அவரை பேக் செய்வதற்கு பதில் ஷேக் ரஷீத், ஆன்ட்ரே சித்தார்த் போன்ற இளம் வீரர்களை நம்பி நம்பர் 3 ஸ்பாட்டில் இறக்கலாம்.

Chennai Super Kings: ராகுல் திரிபாதி தேவையில்லை

அது சீசனில் கைக்கொடுக்காவிட்டாலும் அடுத்தடுத்த சீசன்களில் பெரியளவுக்கு உதவும். திரிபாதியை ஓபனிங்காக மட்டுமே ஏலத்தில் எடுத்தோம் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறி உள்ளார். அப்படியிருக்க, அவர் ஓபனிங்கில் சரியாக விளையாடவில்லை என்றால் பிளேயிங் லெவனை விட்டு நீக்குவதே சரியாகும். மிடில் ஆர்டரை பலப்படுத்த சிஎஸ்கே நிச்சயம் இளைஞர்களை நம்பியாக வேண்டும்.

Chennai Super Kings: ருதுராஜ் கெய்க்வாட்டின் சுயநலம்?

ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3இல் தான் இறங்குவேன் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் உறுதியாக கூறிவிட்டதால்தான் சிஎஸ்கே நிர்வாகம் ராகுல் திரிபாதியை ஒரு ஓபனராக பார்க்கிறது என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தற்போது இந்திய அணி இடமில்லை. தற்போதைய சூழலில் டி20 அணியிலோ, டெஸ்ட் அணியிலோ இடமில்லை எனலாம். 

ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பிருக்கிறது. அதுவும் ரோஹித்தை தவிர்த்து சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் இருப்பதால் நம்பர் 3 இடம்தான் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைக்கும் என்றும் ஒருவேளை கோலி ஒதுங்கினால் அந்த ஸ்பாட்டை பிடிக்க ருதுராஜ் முயற்சி செய்கிறார் என்றும் கூறுகின்றனர். டி20இல் ஒருவேளை சூர்யகுமார் அல்லது திலக் வர்மாவுக்கு காயம் ஏற்படும்பட்சத்தில் அந்த இடத்தை பிடிக்கவும் ருதுராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் நம்பர் 3, நம்பர் 4 ஸ்பாட்டில் விளையாடியதை குறிப்பிடலாம்.

Chennai Super Kings: தியாகியா ருதுராஜ் கெய்க்வாட்?

இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3இல் இறங்குவேன் என ருதுராஜ் கெய்க்வாட் அடம்பிடிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 3இல் வருவதற்கு இதுதான் காரணம் என்றால் அவரின் சுயநலத்தால் சிஎஸ்கே அணி தோற்கிறது என கூறலாம். 

மேலும், சிஎஸ்கே வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்கிடைக்கும் என்பதையும் ருதுராஜ் மறந்துவிடக் கூடாது. இருப்பினும், இது உறுதிசெய்யப்படாத தகவல் என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு தரப்பினரோ, அவருக்கு நம்பர் 3இல் விளையாடினால் மட்டும் இந்திய அணியில் இடம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் நலனுக்காக தன்னுடைய ஓபனிங் ஸ்பாட்டையே துறந்துவிட்டு நம்பர் 3இல் வருகிறார் என்றும் கூறுகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.