புதுடெல்லி: மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அருணாசல பிரதேசத்தின் திராப், சங்லங், லாங்டிங் மாவட்டங்கள், அதேபோன்று நம்சாய், மகாதேவ்பூருக்கு உட்பட்ட பகுதிகள், அசாம் எல்லையை ஒட்டியுள்ள நம்சாய் மாவட்டத்துக்கு உட்பட்ட சவ்கம் காவல் நிலையங்கள் உள்ளிட்டவை ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் பிரிவு 3-ன் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பகுதிகளில் 2025 ஏப்ரல் 1-லிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
நாகாலாந்தைப் பொருத்தவரையில் எட்டு மாவட்டங்கள் மற்றும் 21 காவல் நிலைய வட்டங்கள் மற்றும் இதர 5 மாவட்டங்களுக்கு இந்த சட்டம் அதே கால அளவுக்கு நீட்டிக்கப்படுகிறது.
மேலும், மணிப்பூரில் 13 காவல் நிலைய பகுதிகளை தவிர்த்து அம்மாநிலத்தின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஎப்எஸ்பிஏ சட்டம் முன் அனுமதியின்றி எந்த இடத்திலும் சோதனை நடத்தவும், யாரையும் கைது செய்யவும், படைப்பிரிவுகளை பயன்படுத்தவும் பாதுகாப்பு படைகளுக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது.