வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.
“தொட்டால் பூ மலரும்”. எப்போ மனசு மலரும்? நம்முடைய அன்றாடம், பல கலவையான உணர்வுகளால் கட்டமைக்கப்படுகிறது.
சந்தோஷம், அமைதி, ஆனந்தம், புன்சிரிப்பு, சிரிப்பு, கசப்பு, கண்ணீர், சோகம், கோபம், ஆதங்கம் இப்படிப் பல உணர்வுகளைத் தினசரி எதிர்கொண்டு கடந்து வருகிறோம்.
சில சமயம் மிகவும் கஷ்டமாகவோ, அழுத்தமாகவோ (மொத்தத்துல கொஞ்சம் நல்ல மனநிலையில் இல்லாதப்ப) அல்லது சாதாரணமாகவோ சந்தோஷமாகவோ இருக்கும் போது கூட ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்வில், சொல்லில், செயலில் சட்டென்று மனம் மலர்ந்து விடும்.
அதுவும் நாம் ஒரு சங்கடத்தில் இருக்கும்போது இது போல எதுவும் நடந்தால் மனம் மலர்வதை வெகு நன்றாக உணர முடியும். அது மிக மிக அற்புதமான உணர்வாக இருக்கிறது. அது போன்று என் மனம் மலர்ந்த ஒரு நிகழ்வு.

அதிகாலை ஆறரை மணியிலிருந்து ஏழு மணி (ஆறரை மணி அதிகாலையாப்பா?? இப்பலாம் கொஞ்சம் அப்படிதான்ப்பா). வழக்கமாகச் செல்லும் வழியில், மனதில் பெரிய உற்சாகம் இன்றி எதையோ யோசித்தவாறு (யோசிக்கவா நமக்கு விஷயம் இல்ல?) நடந்து கொண்டிருந்தேன்.
தெரிந்த முகம் ஒன்று சாலையோர கடையில் டபரா டம்பளரில் பொலிவுடன் (அன்னிக்கு வெள்ளிக்கிழமைனு நினைக்கிறேன். தமிழ்ப் பெண்களின் வழக்கமான தலைக்குளியலுடன் மலர்ச்சியாக) காபி குடித்துக் கொண்டிருந்தது.
அவங்க என்னை முதலில் பார்க்கவில்லை. நான் பக்கத்துல போகும் போது தான் பார்த்தாங்க.
உடனே ஒரு விரிந்த சிரிப்புடன், “வாங்கக்கா காபி சாப்பிடலாம்”னு சொன்னாங்க. உண்மையா வாங்கி கொடுக்கும் எண்ணத்துலதான் கேட்டாங்க. சும்மா கேக்கனுமேனு கேக்கல. அத என்னால உணர முடிந்தது.
அவங்க கேட்ட விதத்துல சட்டென்று மனசு சந்தோஷமாகி ஒரு மலர்ந்த மனமார்ந்த புன்னகையைச் சிந்த வைத்தது.
நம்ம சிரிப்பு பல நேரம் கண்ணை எட்டாது. லேசா உதடு விரிச்சு சின்ன சிரிப்பு அல்லது சிரிக்கணுமேனு சிரிக்கறது அப்படின்னு இல்லாம மனசார ஒரு சிரிப்பைக் கொடுக்க முடிந்தது.
“இருக்கட்டும்க்கா நீங்க சாப்ட்டு வாங்க”னு சிரிச்சிட்டே சொல்லிட்டு போய்ட்டேன்.
இது மிக மிக சாதாரண நிகழ்வுதான். அதுவும் ஆண்களுக்குத் தினசரி சம்பவமாகவும் இருக்கலாம்.
டீக்கடையில் நிற்கும்போது தெரிந்தவர்களைப் பார்த்தால், “டேய் மாப்பிள்ளைக்கும்/தம்பிக்கும்/மச்சானுக்கும் சேர்த்து ஒரு டீ சொல்லு” அப்படின்றது ரொம்ப சாதாரணம்.

ஆனால் பெண்களுக்குச் சாலையோரக் கடையில் இது சாதாரணமல்ல. எனக்கும் அந்த நாளில், அந்த நேரத்தில் மூடிக் கிடந்த என் மனதை மலர வைத்தது அவங்க செய்கை தான்.
“மனம் மலர்ந்தது”னு இந்த வார்த்தையை உணர வைத்ததும் இந்த நிகழ்வுதான். பின்னர் மலர்ந்த புன்னகையுடனே வீடு சென்று சேர்ந்தேன்.
அவங்க யார்னு சொல்லலையே. அப்பார்மென்ட்ல Maintenance வேலைக்கு (கூட்டி, துடைத்து, குப்பை கொடுத்துனு எல்லா வேலையும்) வர்றவங்க.
வேலையெல்லாம் சுத்தமா செய்வாங்க. அவங்க தினமும் அங்க காபி குடிப்பாங்களானு தெரியாது. அன்னிக்குத்தான் நான் பார்த்தேன். என்னைக் கேக்கணும்னு அவசியம் இல்ல. வசதியானவங்களும் இல்ல.
தமிழர்களின் இயல்பான விருந்தோம்பல் பண்பு இதுதான் இல்ல? வசதி, பணம் காசு இருக்கு இல்ல எல்லாத்தையும் தாண்டி, நான் சாப்பிடும்போது, உன்னையும் சாப்பிட சொல்வது ரொம்ப நல்ல விஷயம். நம்முடைய தனித்தன்மையான செயல்களில் இதுவும் ஒன்று.
ஆனால் இந்த பண்பே இன்றைய காலகட்டத்தில் சற்று அருகி வரும் நிலையில் எனக்கு இது special moment தான். சாதாரண நிகழ்வு தான். ஆனால் எப்போ நினைத்தாலும் இதமான புன்னகையும், மனநிலையும் கொடுக்கும் நிகழ்வு. அதனால் பொக்கிஷமான நினைவுகளில் இதுவும் ஒன்று. அவங்க பெயர் உமா.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.