வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற்றதன் பின்னணி என்ன?

புதுடெல்லி: ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தில் (பிஜேடி) இணையும் பொருட்டு விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தமிழர் வி.கே.பாண்டியன். இவரது மனைவி சுஜாதாவும் தன் ஐஏஎஸ் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த தமிழரான வி.கே.பாண்டியன் 2000 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். ஒடிசா மாநிலப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். தம் பணிக்காலத்தில் சிறந்த அதிகாரியாகப் பெயரெடுத்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானார்.

இதையடுத்து முதல்வர் நவீனின் கட்சியான பிஜேடியில் இணையவேண்டி தன் ஐஏஎஸ் பதவியிலிருந்து 2023 இல் விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்து 2024 இல் வந்த சட்டப்பேரவை தேர்தலிலும் தீவிரம் காட்டினார். தொடர்ந்து ஐந்து முறை ஆட்சிசெய்த பிஜேடி, தமிழரான பாண்டியனால் ஆட்சி இழந்ததாக உட்கட்சிக்குள்ளேயே புகார் கிளம்பியது.

இதனால், அரசியலிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்த பாண்டியன் தற்போது என்ன செய்கிறார்? எங்கு உள்ளார்? என்பதே வெளியில் தெரியாத நிலை உள்ளது. எனினும், நேற்று முன்தினம் அவர் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீனுடன் கோயம்புத்தூர் விமானநிலையத்தில் திடீர் எனக் காணப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.

உடல்நலப் பரிசோதனைக்காக அவரை பாண்டியன், கேரளா அழைத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. இச்சூழலில், பாஜகவில் அமைந்த ஒடிசா அரசின் கீழ் 2022-ல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பாண்டியனின் மனைவியான சுஜாதாவும் தற்போது ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக அவர் மே 31 முதல் குழந்தை பராமரிப்பிற்கான (சிசிஎல்) ஆறுமாத விடுப்பு பெற்றிருந்தார். இதை முடித்து மீண்டும் பணியில் இணைந்த நிலையில் மூத்த அதிகாரியான சுஜாதா, தன் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வுக்கு மனு செய்திருந்தார். மார்ச் 13 -ல் பெற்ற இவரது விருப்ப ஓய்வு மனுவை மார்ச் 28-ல் மத்திய அரசு ஏற்றது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஒடிசா மாநில அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “புதிதாக மாறிய பாஜக ஆட்சியில் நிலவிய நெருக்கடியும் இந்த விருப்ப ஓய்வுக்கு காரணமாகி உள்ளது. நவம்பர் 2024-க்கு பின் மேலும் ஆறு மாதத்திற்காக அவரது சிசிஎல் நீட்டிக்கவும் ஒடிசா அரசு மறுத்திருந்தது.

ஒடிசாவின் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பாண்டியன், வேற்று மாநிலத்தவராகவே பிஜேடியினரால் பார்க்கப்பட்டார். இதனால், கணவர் பாண்டியனின் அரசியல் நுழைவில் அதிகாரி மனைவிக்கு விருப்பம் இல்லை.

ஒடிசாவைச் சேர்ந்தவரான சுஜாதாவும் இப்போது பிஜேடியில் முழுமூச்சாக இறங்கும் சூழலும் உருவாகி வருகிறது. மிகவும் திறமை வாய்ந்தவரான சுஜாதா சர்வதேச நிறுவனத்தில் ஆலோசகராகும் வாய்ப்புகளும் உள்ளன.” எனத் தெரிவித்தனர்.

டெல்லியின் பிரபல லேடிஸ்ரீராம் கல்லூரியில் படித்த சுஜாதா, அதன் முதல் மதிப்பெண் மாணவி. பிறகு, ஜவகர்லாஅல் நேரு பல்கலைழகத்தில் அவர் சர்வதேச அரசியல் துறையில் முதுநிலை முடித்தர். தாம் ஐஏஸ் பயிற்சி பெற்ற இடத்திலும் சுஜாதா சிறந்த மாணவியாக இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.