கவுகாத்தி,
18-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெய்க்வாட் 63 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே பெங்களூருவிடமும் தோற்று இருந்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்றிருந்த ராஜஸ்தானுக்கு முதலாவது வெற்றியாகும்.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டியில், ” இந்த வெற்றி உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. கடந்த 2 போட்டிகளில் நாங்கள் அடைந்த தோல்விக்கு பின்னர் தற்போது வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த ஆட்டத்தில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டதாக உணர்ந்தோம். மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் விரைவாக 2 விக்கெட்டுகளை இழந்ததால் இறுதி கட்டத்தில் ரன் குவிக்க முடியவில்லை.
இருப்பினும் நாங்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினோம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தினர். நாங்கள் இரண்டு கடினமான ஆட்டங்களைச் சந்தித்தோம். அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் குறைவாக அடித்த 20 ரன்களை பீல்டிங் ஈடுசெய்து விட்டது” என்று கூறினார்.