‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். தனுஷுடன் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் 15 சதவிகிதப் படப்பிடிப்பு மீதமுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என விகடனுக்கு அளித்தப் பேட்டியில் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார். நடிகர்கள் அனைவரும் இருக்க வேண்டிய அந்தக் காட்சிகளில் அவர்களின் தேதி ஒன்றாகக் கிடைக்காததால் படப்பிடிப்பு தள்ளிப் போயிருக்கிறது எனவும் கூறியிருந்தார்.
தற்போது ‘இட்லி கடை’ திரைப்படம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார் அருண் விஜய். படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, ”இத்திரைப்படம் பெரியதாக இருக்கப்போகிறது!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அருண் விஜய் அளித்தப் பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமென்ட்ஸ் பகுதியில் ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் தேதியைக் கேட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பதிலளித்த அருண் விஜய், ”நாங்கள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் மற்றும் ‘தல’-யும் (அஜித்) வருகிறார்.” என அவர் பதிவிட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் ஏப்ரல் 10-ம் வெளியாகவிருக்கிறது.