‘அடுத்தடுத்து தோல்வி’
சென்னை அணி தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியிருக்கிறது. மும்பைக்கு எதிராக சீசனை வெற்றியோடு தொடங்கிய அணி அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி வருகிறது. சென்னை அணி எங்கேதான் தவறு செய்கிறது?

‘அப்டேட் ஆகாத அணுகுமுறை’
மற்ற அணிகள் 250+ ஸ்கோர்களை எளிதாக எடுக்கையில் சென்னை அணியால் மட்டும் 180+ டார்கெட்டுகளை கூட வெற்றிகரமாக சேஸ் செய்ய முடியவில்லை. இப்போதில்லை கடந்த 6 வருடமாக சென்னை அணி 180+ டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை. எனில், சென்னை அணி எந்த அணுகுமுறையோடு ஆடி வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். பவர்ப்ளேயில் கொஞ்சம் அதிரடியாக ஆட வேண்டும். மிடில் ஓவர்களில் நின்று நிதானமாக பார்ட்னர்ஷிப்களை பில்ட் செய்ய வேண்டும்.
டெத் ஓவர்களில் போட்டியை நெருக்கமாக எடுத்துச் சென்று அதிரடியாக வெல்ல வேண்டும். இதுதான் சென்னை அணியின் அணுகுமுறை. ஆனால், இது மிகமிக பழைய அணுகுமுறை. பல அணிகளும் இந்த அணுகுமுறையிலிருந்து வெளிவந்துவிட்டன.

அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதுதான் நவீன டி20 சூழலில் எடுபடும் என்பதை அறிந்து அதற்கேற்ப அணியை கட்டமைத்து தங்களை தகவமைத்துக் கொண்டன. ஆனால், சென்னை அணி அப்படி ஒரு அணியை கட்டமைக்கவும் இல்லை. தங்களை காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும் இல்லை.

‘தோனி – ஃப்ளெம்மிங் அனுபவம்!’
அப்படியிருந்தும் கடந்த நான்காண்டுகளில் இரண்டு கோப்பைகளை வென்றிருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் எனில், சென்னை அணியில் தோனியும் ப்ளெம்மிங்கும் நீண்ட அனுபவம் மிக்கவர்கள். நிதானமாக யோசிக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு வெற்றிக்கான ஃபார்முலாவும் ப்ளூ ப்ரிண்ட்டும் தெரியும். இந்த இந்த விஷயங்களை சேர்த்தால் நாம் தப்பித்துவிடுவோம். நமக்கு தேவையான குறைந்தபட்ச ரிசல்ட்டாவது கிடைத்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த சீசனில் அந்த விஷயத்தில் சொதப்புவதும் பிரச்சனையாக இருக்கிறது. ஓப்பனிங் கூட்டணியை வலுவாக அமைத்துவிட வேண்டும். அந்த ஓப்பனிங் கூட்டணியே பெரும்பாலான ரன்களை எடுத்துவிட வேண்டும். இதுதான் சென்னை அணியின் வெற்றி ரகசியங்களில் மிக முக்கியமான அம்சம். இந்த முறை அதிலும் சொதப்புகிறார்கள்.
‘ஓப்பனிங கூட்டணி சொதப்பல்!’
ஒரு சரியான ஓப்பனிங் கூட்டணியை இந்த முறை சென்னை அணி உருவாக்கவே இல்லை. ரச்சினும் ராகுல் திரிபாதியும் ஓப்பனிங் இறங்குகிறார்கள். ஒரு கூட்டணியாக இருவருக்கும் செட்டே ஆகவில்லை. 3 போட்டிகளிலும் இரண்டு ஓவர்களை கூட இந்த ஓப்பனிங் கூட்டணி தாண்டவில்லை. பிரச்சனையே இல்லாத இடத்தில் தாங்களாகவே ஒரு பிரச்சனையை சென்னை அணி உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ருத்துராஜூம் கான்வேயும் ஓப்பனிங் இறங்கி வந்தார்கள். அது வெற்றிகரமான கூட்டணி.
‘சென்னையே உருவாக்கிய பிரச்னை!’
கடந்த சீசனில் கான்வேக்கு காயம். அதனால்தான் ரச்சினும் ருத்துராஜூம் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இந்த முறை கான்வே முழு உடற்தகுதியுடன்தான் இருக்கிறார். ஆனாலும் அவரை பென்ச்சில் வைத்திருக்கிறார்கள். ருத்துராஜூம் தன்னை நம்பர் 3 க்கு தள்ளிக் கொண்டிருக்கிறார். ருத்துராஜூக்கு ஓப்பனிங் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும். அவருக்கு மட்டுமில்லை. ஓப்பனிங் கூட்டணியாக ஒரு பெரிய ரன்னை எடுப்பதற்கும் அதுதான் சரியாக இருக்கும்.

இப்போது ராகுல் திரிபாதி ஓப்பனிங் இறங்குகிறார். ஓப்பனிங் இறங்கி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னையை சாம்பியனாக்கிய ருத்துராஜின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதே அவருக்கு பெரிய அழுத்தம்தான். அவர் ஸ்பின்னர்களை நன்றாக ஆடக்கூடியவர். நம்பர் 3, 4 இல் இறங்கினால் ரன்ரேட்டை குறையவிடாமல் அட்டாக்கிங்காக அவரை விடுவார். அவரை தூக்கி ஓப்பனிங் இறக்கிவிட்டு ருத்துராஜ் நம்பர் 3 இல் வருவது, இல்லாத பிரச்னையை உருவாக்குவதற்கு சமமே. சென்னையின் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை. திரிபாதி கீழே வரும்போது அந்த மிடில் ஆர்டரும் வலுப்பெறும்.
‘கான்வே எங்கே?’
கான்வேயை பென்ச்சில் வைத்திருப்பதற்கான காரணமும் புரியவில்லை. பதிரனா, சாம் கரண்/ ஓவர்டன் என இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் பதிரனாவை மட்டும் வைத்துக் கொண்டு இன்னொரு ஸ்லாட்டுக்கு கான்வேயை எடுத்துக் கொள்ளலாம். அந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் மூலம் கிடைக்கும் ஓவர்களை சிவம் துபே, விஜய் சங்கர் ஆகியோரை வைத்து சமாளிக்கலாம். இருவருமே பந்துவீச தயாராகத்தான் இருக்கிறார்கள்.

ருத்துராஜ், கான்வே ஓப்பனிங், ரச்சின் நம்பர் 3, திரிபாதி நம்பர் 4, சிவம் துபே நம்பர் 5, விஜய் சங்கர் நம்பர் 6, என்று இருந்தால் சென்னை அணியின் பேட்டிங் லைன் அப் இன்னும் வலுவானதாக மாறும்.
‘மோசமான பீல்டிங்!’
பீல்டிங்கிலும் இன்னும் வலுப்பெற வேண்டும். கடந்த மூன்று போட்டிகளில் தீபக் ஹூடாவும் ஜேமி ஓவர்டனும் ட்ராப் செய்திருக்கும் கேட்ச்கள் அநியாயமானவை. பவுண்டரி லைனுக்கு வெளியே நிற்கும் சிறுவர்கள் கூட அவற்றை எளிதாக கேட்ச் பிடித்திருப்பார்கள். எல்லாமே Regulation கேட்ச்சுகள். மெக்கல்லம், பிராவோ, ரெய்னா காலத்து சென்னை அணிதான் பீல்டிங்கில் வலுவாக இருந்திருக்கிறது. அதற்கு பிறகான அணிகள் பீல்டிங்கில் கொஞ்சம் வீக்தான்.

ஆனாலும் அடிப்படையான விஷயங்களில் சரியாக இருப்பார்கள். கைக்கு வரும் கேட்ச்சையெல்லாம் கோட்டை விடமாட்டார்கள். நேற்றைய போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில்தான் சென்னை அணி தோற்றிருக்கிறது. பீல்டிங்கில் முறையாக செயல்பட்டிருந்தால் இந்தப் போட்டியை சென்னை அணி வென்றிருக்கும்.
இந்த 3 போட்டிகளின் முடிவில் சென்னை அணி 2020 சீசன் வைப்ஸையே ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறது. சீக்கிரமே சென்னை அணி மீண்டு வர வேண்டும். அடுத்தப் போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. நல்ல இடைவேளை. தவறுகளை ஆய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.