எம்புரான் சினிமாவில் குஜராத் கலவரம் குறித்து சில கருத்துக்கள் உள்ளதாக சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. `எம்புரான் சினிமாவை பார்க்கப்போவதில்லை’ என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
அதே சமயம் பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் கருத்து தெரிவித்ததுடன், எம்புரான் சினிமாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது பாசிச மனப்பான்மையின் புதிய வெளிப்பாடு என சங்பரிவார் அமைப்பை விமர்சித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இந்த நிலையில் எம்புரான் சினிமா குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன்லால்.

நடிகர் மோகன்லால் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது:
லூசிபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் சினிமா குறித்து எழுந்துள்ள அரசியல் மற்றும் சமூக கருத்துகள் என்னிடம் அன்புகொண்டுள்ளவர்களில் ஒரு பகுதியினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அறிந்தேன்.
ஒரு கலைஞன் என்ற நிலையில் என்னுடைய சினிமாவிலும் எந்தவிதமான அரசியல் கட்சியினுடனோ, கொள்கையுடனோ, மத விவகாரங்களிலோ வெறுப்பு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது எனது கடமையாகும். ஆகவே, எனக்கு பிரியமானவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனமார்ந்த வருத்தத்தை நானும், எம்புரான் படக்குழுவினரும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இதற்கான பொறுப்பு சினிமாவின் பின்னணியில் பணியாற்றிய எங்கள் அனைவர் மீதும் உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். எனவே அந்த கருத்தை சினிமாவில் இருந்து நீக்குவது என நாங்கள் ஒருமித்த முடிவை எடுத்துள்ளோம். கடந்த 40 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாக சினிமா வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றேன். உங்கள் அன்பும், நம்பிக்கையும்தான் என் பலம். அதைத்தாண்டி மோகன்லால் இல்லை என நான் நம்புகிறேன். அன்புடன் மோகன்லால்.” இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
