MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்தில் இன்று களமிறங்கின.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதோடு, கடந்த போட்டியில் டிராப் செய்யப்பட்ட விக்னேஷ் புத்தூரும், அறிமுக வீரராக அஸ்வனி குமாரும் பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்று பாண்டியா தெரிவித்தார். ஆனால், மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பிளெயிங் லெவனில் ரோஹித் இடம்பெறவில்லை. அதேபோல், கொல்கத்தா அணியில் மொயின் அலி பென்ச்சில் அமரவைக்கப்பட்டு சுனில் நரைன் மீண்டும் அணிக்குள் வந்தார்.

ஹர்திக் பாண்டியா - அஜின்கியா ரஹானே  - MI vs KKR
ஹர்திக் பாண்டியா – அஜின்கியா ரஹானே – MI vs KKR

பவர்பிளேயில் டாப் ஆர்டரை காலி செய்த மும்பை!

ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராகத் திகழும் ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவர் வீசவந்தார். அந்தச் சாதனையில் மற்றுமொரு விக்கெட்டை சேர்க்கும் வகையில், நான்காவது பந்திலேயே சுனில் நரனை 0 ரன்னில் கிளீன் போல்டாக்கினார் போல்ட். அடுத்து, நானும் பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் தான் என இரண்டாவது ஓவரை வீசவந்த தீபக் சஹார், தனது முதல் பந்திலேயே குயிண்டன் டி காக்கை 1 ரன்னில் அவுட்டாக்கினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய, அங்கிரிஷ் ரகுவன்ஷி எதுவுமே நடக்காதது போல விக்கெட் விழுந்த அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். அதற்கடுத்து போல்ட் வீசிய மூன்றாவது ஓவரை சிக்ஸருடன் வரவேற்றார் கேப்டன் ரஹானே. மூன்று ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் குவிந்திருந்த வேளையில் நான்காவது வீசிய 23 வயது அறிமுக வீரர் அஸ்வனி குமார், முதல் பந்திலேயே ரஹானேவை விக்கெட் எடுத்து ஐபிஎல்-லில் தனது விக்கெட் கணக்கைத் தொடங்கினார். அதேவகத்தில், துணைக்கேப்டன் வெங்கடேஷ் ஐயருக்கு வீசப்பட்ட பந்தும் கேட்ச்சாக மாறியது. ஆனால், அந்த வாய்ப்பை மிட்செல் சான்ட்னர் தவறவிட்டார்.

தீபக் சஹார்
தீபக் சஹார்

இருப்பினும், கொல்கத்தாவின் விக்கெட் சரிவு நின்றபாடில்லை. போல்ட் வீசிய ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் கேட்ச்சிலிருந்து தப்பிய வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பவர்பிளே முடிவில், கொல்கத்தா அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், அங்கிரிஷ் ரகுவன்ஷி மட்டும் நம்பிக்கையளிக்கும் வகையில் 13 பந்துகளில் 25 ரன்கள் அடித்து நின்றுகொண்டிருந்தார்.

KKR-ஐ வாரிச் சுருட்டிய அறிமுக வீரர் அஸ்வனி குமார்!

ஆனால், கொல்கத்தாவின் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடம் வரை கூட நீடிக்கவில்லை. 7-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா ஓவரின் கடைசி பந்தில், அங்கிரிஷ் ரகுவன்ஷியை வெளியேற்றினார். 45 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நெருக்கடியான சூழலில் இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கிய மணீஷ் பாண்டே, ரின்கு சிங்குடன் கைகோர்த்து கொல்கத்தாவை மீட்கும் வேளையில் இறங்கினார். அதற்கேற்றாற்போல இந்த ஜோடி, விக்னேஷ் புத்தூர் வீசிய 8-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தது. ஹர்திக் வீசிய 9-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்களும், சான்ட்னர் வீசிய 10 ஓவரில் 4 ரன்களும் வர 10 ஓவர்கள் முடிவில் 69 ரன்களை சேர்த்தது கொல்கத்தா.

அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

பாண்டே – ரின்கு கூட்டணி 25 ரன்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், 11-வது ஓவரில் அந்த இருவரையுமே அவுட்டாக்கினார் அஸ்வனி குமார். 11 ஓவர் முடிவில் 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து அதளபாதாளத்தில் விழுந்தது கொல்கத்தா. ரஸலும், ரமன்தீப் சிங்கும் 0 ரன்னில் நின்றுகொண்டிருந்தனர். அந்தச் சூழலில், 12-வது ஓவரின் முதல் பந்திலேயே ரஸலை எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் சான்ட்னர். ஆனால், ரிவ்யூ எடுத்து விக்கெட்டிலிருந்த்து தப்பித்தார் ரஸல். ஆனால், அங்கு தப்பித்த ரஸலை 13-வது ஓவரில் கிளீன் போல்டாக்கினார் அஸ்வனி குமார். 13 ஓவர்கள் முடிவில் 90 ரன்களுக்கு 8 இழந்தது கொல்கத்தா. அதில், பாதி விக்கெட்டுகளை அஸ்வனி குமார் மட்டுமே சாய்த்தார்.

கடைசி வரை மீளாத கொல்கத்தா!

அடுத்து, சான்ட்னர் வீசிய 14-வது ஓவரில் 4 ரன்கள் வந்தது. அதைத்தொடர்ந்து, விக்னேஷ் புத்தூர் வீசிய 15-வது ஓவரை ரமன்தீப் சிங் பவுண்டரியுடன் வரவேற்க, ஓவரின் 3-வது பந்திலேயே ஹர்ஷித் ராணாவும் அவுட்டானார். அதே ஓவரில் ரமன்தீப் சிங்கின் கேட்ச் வாய்ப்பும் வந்தது. ஆனால், அந்த கேட்சை அஸ்வனி குமார் தவறவிட்டார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ரமன்தீப் சிங், போல்ட் வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸுடன் 9 ரன்கள் சேர்த்தார்.

ரமன்தீப் சிங்
ரமன்தீப் சிங்

அதேவேகத்தில், சான்ட்னர் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த ரமன்தீப் சிங் அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா கைகளில் கேட்ச் அவுட்டானார். 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கொல்கத்தா. மும்பை அணியில் அதிகபட்சமாக அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளும், தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுகளும், போல்ட், பாண்டியா, விக்னேஷ் புத்தூர், சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இம்பேக்ட் ஏற்படுத்தாமல் சென்ற இம்பேக்ட் பிளேயர் ரோஹித்!

117 என்ற எளிய இலக்கை நோக்கி ஓப்பனிங் இறங்கிய ரிக்கல்டன் – ரோஹித் (விக்னேஷ் புத்தூருக்குப் பதில் இம்பேக்ட் பிளேயர்) கூட்டணி எந்த அவசரமும் படாமல் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் ஒரேயொரு ரன்னை மட்டும் விட்டுக்கொடுத்தார் கொல்கத்தா பவுலர் ஸ்பென்சர் ஜான்சன். ஆனால், இரண்டாவது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, ஒரு வைடு, ஒரு நோ பால், சிக்ஸ் என 14 ரன்களை வாரி வழங்கினார். அடுத்து, மூன்றாவது ஓவரில் ஜான்சனும் தனது பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என மொத்தமாக 13 ரன்கள் கொடுத்தார்.

ரஸல்
ரஸல்

கொல்கத்தா பவுலர்கள் வள்ளல் தன்மை அடுத்த ஓவரில் இன்னும் எகிறியது. ஹர்ஷித் ராணா வீசிய நான்காவது ஓவரில், ரிக்கல்டன் அதிரடியாக 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். நான்கு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் குவித்தது மும்பை. இந்த நேரத்தில்தான், எப்படியாவது இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும் என வருண் சக்ரவர்த்தி கையில் பந்தை ஒப்படைத்தார் ரஹானே. ஐந்தாவது ஓவரில் விக்கெட் விழவில்லை என்றாலும், வெறும் 2 ரன்கள் மட்டுமே வந்தது. ஆனால், அதற்கடுத்த ஓவரில் ரஸல் பந்துவீச்சில் ரோஹித்தின் விக்கெட் வீழ்ந்தது. பெரிதாக இம்பேக்ட் ஏற்படுத்தாமல் 13 ரன்னில் வெளியேறினார் ரோஹித். பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் குவித்தது மும்பை.

அதிரடியாக அரைசதமடித்த ரிக்கல்டன்… முடித்துவைத்த SKY!

அதையடுத்து, வருண் வீசிய 7-வது ஓவரில் 7 ரன்களும், நரைன் வீசிய 8-வது ஓவரில் 8 ரன்களும் வந்தது. மீண்டும் வருண் வீசிய 9-வது ஓவரில் பவுண்டரி எதுவுமின்றி 3 மட்டுமே வந்தாலும், நரைன் வீசிய 10-வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ஐபிஎல்-லில் தனது முதல் அரைசத்தைக் கடந்தார் ரிக்கல்டன். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது மும்பை.

ரிக்கல்டன்

60 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தால் மும்பை வெற்றி என மேட்ச் கைமீறிப்போன நேரத்தில், ரஸல் வீசிய 11-வது ஓவரில் அற்புதமான கேட்ச் மூலம் வில் ஜாக்ஸை பெவிலியனுக்கு அனுப்பினார் ரஹானே. ஆனால், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதே ஓவரில் கடைசி பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார்.

நரைன் வீசிய 12-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் வந்தது. அடுத்து, ரஸல் வீசிய 13-வது ஓவரில் முதல் இரு பந்துகளையும் பவுண்டரியுடன் வரவேற்ற சூர்யகுமார் யாதவ், அதே ஓவரில் தனது ட்ரேட்மார்க் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்து மேட்சை முடித்துவைத்தார். இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலிருந்த கொல்கத்தாவை கடைசி இடத்துக்குத் தள்ளி, கடைசி இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது மும்பை. தனது முதல் போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருது வென்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.