“அதிமுக, பாஜக மற்றும் தவெக இடையே இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி” – திருமாவளவன்

சென்னை: “அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக-பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்று கூறியுள்ளார். எனவே, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது”, என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திலே வரும் என்ற எண்ணத்தில் அமித்ஷா கூறியிருப்பார். தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கேத் தெரியும்.

இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சித் தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்யும் ஒரு உறுதியா நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை.

அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியபோது, அதிமுக-பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்றே கூறியுள்ளார். எனவே, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “மகராஷ்டிரா மாநிலத்தை வட இந்தியாவோடு பார்ப்பதில்லை. அதுவும் கிட்டத்தட்ட தென்னிந்தியாவோடுதான் இருக்கிறது. தாய்மொழி உணர்வு இப்போதுதான் தமிழகத்தைத் தாண்டி பலருக்கும் உருவாகி வருகிறது. இந்தி திணிப்பை அவர்கள் இதுவரை ஒரு எதிரான நடவடிக்கையாகவே பார்க்காமல் இருந்துவிட்டனர். அதனால், வடஇந்தியாவில் பூர்வக்குடி மக்கள் பேசிய பல மொழிகள் அழிந்துப் போயிருக்கின்றன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட தங்களது தாய்மொழி இந்தியால் அழிக்கப்பட்டுவிட்டது என்று, சட்டமன்றத்திலேயே பேசக்கூடிய அளவுக்கு தற்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. இதற்கெல்லாம் தமிழகம்தான் ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பதை, இப்போது வெவ்வேறு மாநிங்களில் உள்ள மக்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.