மும்பை,
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் பல, புதிய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.
இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியில் அனிகேத் வர்மா, ஜீஷான் அன்சாரி, டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம், லக்னோ அணியில் பிரின்ஸ் யாதவ், மும்பை அணியில் விக்னேஷ் புதூர் போன்ற இளம் வீரர்கள் தங்களது அறிமுக போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் புகுந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான பஞ்சாபை சேர்ந்த அறிமுக வீரர் அஸ்வனி குமார் (வயது 23) 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார்.
3 ஓவர் பந்துவீசி 4 விக்கெட்டுகளை (ரஹானே, ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, ஆண்ட்ரே ரசல்) வீழ்த்தி மும்பையின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார். இந்நிலையில், யார் இந்த அஸ்வனி குமார்? அவரது பின்னணி, பயணம் பற்றி பார்ப்போம்.
23 வயது இளம் வீரரான அஸ்வனி குமார். பஞ்சாபை சேர்ந்த இவர் கடந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலத்தில் அஸ்வனி குமாரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணி வாங்கியது.
இவர் கடந்த 2022 ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். நேற்றைய ஆட்டத்தில் அறிமுகம் ஆகும் முன்னர் அஸ்வனி குமார் பஞ்சாப் அணிக்காக வெறும் 4 டி20 போட்டிகளில் ஆடி 2 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். மேலும், ரஞ்சி டிராபி தொடரில் இரு ஆட்டங்களிலும், விஜய் ஹசாரே தொடரில் 3 போட்டிகளிலும் ஆடி உள்ளார்.
அதேசமயம், ஷெர்-இ-பஞ்சாப் டிராபி டி20 தொடரில் (பஞ்சாபில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்)அபாரமாக செயல்பட்ட அஸ்வனி குமாரை கண்டறிந்த மும்பை அணி அவரை ஐ.பி.எல் தொடரில் ஏலத்தில் எடுத்து, அணியில் ஆட வைத்துள்ளது.
அஸ்வனி குமார், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த இவர், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் சிறு வயதிலிருந்தே கடின உழைப்பை மேற்கொண்டு வந்துள்ளார். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த அஸ்வனி குமாரின் விடாமுயற்சி அவருக்கு ஐ.பி.எல். மூலம் விஸ்வரூப வெற்றியை கொடுத்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற அஸ்வனி குமார், நான் மொஹாலி அருகே ஒரு கிராமத்திலிருந்து வருபவன். இந்த நிலைக்கு வருவதற்கு மிகுந்த கடின உழைப்பும், கடவுளின் அருளும் துணை நின்றிருக்கிறது என தனது முதல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பிறகு உணர்ச்சி பொங்க பேசினார்.