நியூயார்க்: இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளதாவது: உலக நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதால் நமது ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, இந்தியா அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு 100 சதவீத வரியினை விதிக்கிறது. அதேபோல், பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50%, ஜப்பான் 700% வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300% வரியை விதிக்கிறது. இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர விதி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்துவிட்டது. விடுதலை தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (நாளை) முதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு கரோலின் கூறியுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “ அமெரிக்க பொருட்களுக்கு கணிசமான வரிகளை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது எனது கவனத்துக்கு வந்துள்ளது. அவர்கள் ஏன் இதை நீண்ட காலத்துக்கு முன்பே செய்யவில்லை என்பதே எனது கேள்வி” என்றார்.