உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிதிக்கு உட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் தகவல்

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுக்கும் பணிகளை, நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக் கூடிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது? சுங்கக்கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நீங்கள் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து குறைக்கச் சொல்ல வேண்டும்” என்றார். தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:

அமைச்சர் எ.வ.வேலு: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் 57 சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று பார்ப்பதில்லை. சாத்தியக்கூறு இல்லாத பணிகள் தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் 77 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

சுங்கக்கட்டணங்களை குறைக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதங்கள் மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதற்கு, சுங்க விதிகளை மாற்றியுள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்துகிறோம். அதனால், காலாவதியாக என்பது கிடையாது. தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் வலியுறுத்துவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தை கொண்டு வந்தீர்கள். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் 10 திட்டங்களை கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டார். நாங்களும் கொடுத்தோம். ஆனால், பெரும்பாலான திட்டங்கள் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய தொகுதியில் நான் கொடுத்த பணிகளில் 2 பணிகள் மட்டுமே எடுத்து கொள்ளப்பட்டது. மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பணிகளை கொடுக்கின்றனர். அதனால், சாத்தியமில்லை என கூறுவதை விட்டுவிட்டு, நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

எ.வ.வேலு: சாத்தியமில்லை என்றால் வேறு பணிகளை கொடுக்க சொல்கிறோம். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் சமமாக நினைக்கிறோம்.

பழனிசாமி: நீங்கள் கொடுத்திருக்கும் பணிகள் சாத்தியமில்லை. மீண்டும் கோரிக்கை கொடுங்கள் என்று கேட்டனர். நாங்கள் கொடுத்தோம். அதுவும் சாத்தியமில்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டது. பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டது எப்படி சாத்தியமில்லாமல் போகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் மாற்றுப் பணியை தந்தாலும் அதுவும் சாத்தியமில்லை என்று தெரிய வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். அதை நான் மறுக்கவில்லை.

இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, 2 மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். முதல்வராகிய நானே அதை தலைமை தாங்கி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். கட்சி பாகுபாடின்றி, இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 6 மாதத்துக்கு முன்பு எதிர்க்கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த திட்டத்தில் நிறைவேற்றி தருவதற்கான பணிகள் குறித்த பட்டியல் எதுவும் தரவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டு அதற்குப்பிறகு தான் அவர் தந்தார்.

சாத்தியமில்லாத திட்டம் வரும்போது நிறைவேற்ற சாத்தியமில்லை என்ற பதில் வருகிறது. எனவே நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக் கூடிய திட்டங்களைத்தான் நிறைவேற்ற முடியும். பள்ளிக்கூடத்துக்கான கட்டிடங்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். இது அந்த துறையின் சார்பில் நிறைவேற்றப்படுகிறது.

பழனிசாமி: மக்களின் பிரச்சினைகளைத்தான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிந்துரை செய்கின்றனர். அது சாத்தியமில்லை என்றால், வேறு ஒரு பணியை கொடுக்கின்றனர். அந்த பணியையும் எடுத்துக் கொள்ள மறுக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளைத்தான் கொடுக்க முடியும். அரசு நினைக்கும் மாதிரியான பணிகளை கொடுக்க முடியாது.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு: நானே ரூ.400 கோடி பணியை கொடுத்தேன். ஆனால், அது நடக்குமா என்று சொல்ல முடியாது. அரசு முடிந்த அளவு செய்து வருகிறது.

பழனிசாமி: ரூ.100 கோடி பணிகளை பரிந்துரை செய்வதில்லை. ரூ.4 கோடிக்கு உட்பட்ட பணிகளைத்தான் பரிந்துரை செய்கிறோம். அதனை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.