புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி உதவி செய்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவில் அரசு முறை பயணம் செய்தார். அப்போது சசி தரூர் கூறும்போது, “பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமையும். நமது நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சசி தரூர் பேசும்போது, “உக்ரைன் போர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெளிவான கொள்கையை பின்பற்றுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்துகிறார். இரு நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சி செய்கிறார்” என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் பிரபல ஆங்கில இதழில் சசி தரூர் எழுதியுள்ள கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன் 5-வது ஆண்டை தற்போது அனுசரிக்கிறோம்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள்கூட, பின்தங்கிய நாடுகளுக்கு உதவி செய்யவில்லை. ஆனால் வளரும் நாடான இந்தியாவின் சார்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் நமது அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது சர்வதேச தலைமை பண்புக்கான மிகச் சிறந்த உதாரணம் ஆகும். இந்தியாவின் உற்பத்தித் திறன், உதவும் குணம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்திய ராணுவத்தை சேர்ந்த மருத்துவர்கள், நேபாளம், மாலத்தீவு, குவைத் நாடுகளுக்கு சென்று மருத்துவ சேவைகளை வழங்கினர். தெற்காசிய நாடுகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா உதவி செய்தது. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்தியா தீர்வினை வழங்குகிறது. இவ்வாறு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கேரளாவில் ஆழமாக கால் ஊன்றி உள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் சசி தரூரும் உள்ளார். ஆனால் காங்கிரஸ் தலைமை மற்றும் கேரள காங்கிரஸ் தரப்பில் அவர் ஓரம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சசி தரூர் அண்மையில் பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கடந்த 2009, 2014, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து தரூர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைமை அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்காவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவர் பாஜகவுக்கு அணி மாறக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.