புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. அது நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், சிலரின் சுயநல அரசியல் லாபத்துக்காகவே மும்மொழிக் கொள்கை சர்ச்சை உருவாக்கப்படுகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக சாடியுள்ளார்.
செய்திநிறுவனம் ஒன்றுக்கு யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், “உத்தரப் பிரதேச பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் உத்தரப் பிரதேசம் பாதிக்கப்பட்டுவிட்டதா? புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் தங்களின் அரசியல் நோக்கங்களை அடைய முடியும். ஆனால் அவர்கள் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மொழிகள் குறித்த சர்ச்சைக்காக பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக முதவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடுவது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த வாரத்தில் மற்றொரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “தங்களுடைய வாக்கு வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புவதால், திமுக தலைவர் பிராந்தியம் மற்றும் மொழிகளின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்க விரும்புகிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
தரவுகள் கேட்கும் கார்த்திக் சிதம்பரம்: உத்தரப் பிரதேச பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதாக ஆதித்யநாத் கூறியதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் உத்தரப் பிரதேசத்தில் எத்தனை பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தித் திணிப்பை நிறுத்துக என்ற ஹேஸ் டேக்குடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வேலைக்காக தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து வரும் உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் யாருக்கும் தமிழ் மொழி பற்றிய முன்னறிவு இல்லை. தமிழ் மொழியை கற்பிக்க எத்தனை தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரங்களை உத்தரப் பிரதேச அரசு வெளியிடுமா?
அங்கு எத்தனை மாணவர்கள் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்துள்ளனர்? தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.