சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன.
தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “உத்தரப்பிரதேச பள்ளிக்கூடங்களில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர்? இந்த தரவுகளை உத்தரப்பிரதேச அரசால் கொடுக்க முடியுமா?
தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வருவதில்லை. இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இந்தித் திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது என்பதும், இதற்கு முன்பும், தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை விமர்சித்து யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.