மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த எம்புரான் சினிமா கடந்த மாதம் 27-ம் தேதி மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. சினிமா ரிலீஸ் ஆன மறுநாளில் இருந்தே குஜராத்தில் நடந்த கலவரம் சம்பந்தமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக சங்பரிவார் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.
தொடர்ந்து பெரிய அளவிலான விவாதங்கள் எழுந்ததை அடுத்து, எம்புரான் சினிமாவை பார்க்கமாட்டேன் என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து சினிமாவுக்கு ஆதரவாகவும், சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராகவும் கேரள மாநில சட்டசபை எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசனும், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயனும் கருத்துக்கள் தெரிவித்தனர். மேலும், எம்புரான் படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் எனவும் நடிகர் மோகன் லால் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து எம்புரான் சினிமாவில் 17 காட்சிகளை சென்சார் செய்ய படக்குழு முடிவு செய்தது. அதன்படி பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன. மத சின்னங்களின் பின்னணியில் வாகனங்கள் செல்லும் செல்லும் காட்சி நீக்கப்பட்டது.
நீக்கங்கள் செய்தும் ஓயாத சர்ச்சை!
பஜ்ரங்க் என்ற பெயரில் இருந்த சினிமாவின் முக்கிய வில்லனின் பெயர் பல்தேவ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில விமர்சனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் பிரித்விராஜின் கதாபாத்திரம் தனது தந்தையுடன் பேசும் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் பிரச்னை முடிந்தது என எம்புரான் படக்குழுவினர் நினைத்திருந்த சமயத்தில் கிறிஸ்தவ மதம் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிரியார் தாமஸ் தறையில் கூறுகையில், “எம்புரான் சினிமாவில் கிறிஸ்தத்துக்கு எதிரான கருதுக்களும் இடம்பெற்றுள்ளதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அது அந்த சினிமாவுக்கு அவசியம் இல்லாத காட்சியாகும். ஏற்கனவே நீக்கப்பட்ட பகுதிகள் அரசியல் சம்பந்தப்பட்டது. இது ஒரு மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது. மலையாள சினிமாக்களில் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை மோசமாக சித்திரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.