சென்னை: முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் காட்சிகளை ‘எம்புரான்’ திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என வைகோ, சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ திரைப்படத்தில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணை கேரளாவை காவு வாங்க காத்திருப்பதாகவும் வசனம் இடம்பெற்றுள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்பதுபோல் திட்டமிட்டு வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து, அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்று உறுதி செய்திருக்கிறது. ஆனால், முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்த சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன.
எனவே, இந்தத் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளையும் வசனங்களையும் உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தில் எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்று வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்தத் திரைப்படத்தில் அடிப்படை ஆதாரமற்ற பொய் பரப்புரை காட்சிகளை அமைத்து கேரள மக்களிடையே தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இது இரு மாநில மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதியாகும். எனவே எம்புரான் திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.