சென்னை: இந்திய கடலோர காவல்படையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி கமாண்டன்ட் நா.சோமசுந்தரம் தெரிவித்தார். ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் உள்ள தனது இல்லத்தில் ‘கலாம் சபா’ நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நடத்தி வருகிறார்.
வடசென்னை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய புரிதல்களை பெறவும் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ‘கடலோரக் காவல்படையும், வேலைவாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ‘ஆளுமை சிற்பி’ மாத இதழின் ஆசிரியர் மெ.ஞானசேகர் வரவேற்புரை ஆற்றினார்.
ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு தனது அறிமுக உரையில், “ராணுவத்துக்கு துணையாக துணை ராணுவப் படைகளும், கடற்படைக்கு துணையாக இந்திய கடலோர காவல்படையும் உள்ளன. துணை ராணுவப் படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழும், கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத் துறையின் கீழும் செயல்படுகின்றன. இது இத்துறையின் சிறப்பான விஷயம்” என்றார்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கடலோர காவல்படை அதிகாரி கமாண்டன்ட் நா.சோமசுந்தரம் பேசியதாவது: இந்திய கடலோர காவல்படை கடந்த 1977-ம் ஆண்டு பிப்.1-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் கடற்படையிடம் இருந்து 2 கப்பல்களை கடன் வாங்கி தொடங்கப்பட்ட இப்படையில் தற்போது 150 கப்பல்கள் உள்ளன. இவை தவிர, 24 டார்னியர் ரக விமானங்கள், 4 நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 17 சேட்டக் ஹெலிகாப்டர்கள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாலுமிகள் உள்ளனர்.
கடல் எல்லை, கடல் வளங்கள், கடல் சுற்றுச்சூழல் ஆகிய பாதுகாப்பு பணிகளை கடலோர காவல்படை மேற்கொள்கிறது. குறிப்பாக, கப்பல் மூலம் நடைபெறும் கடத்தலை தடுப்பது, எண்ணெய் கசிவுகளை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. அத்துடன், சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள், அவர்களது படகுகள் உள்ளிட்டவற்றை மீ்ட்கும் பணிகளையும் செய்து வருகிறது.
கடலோர காவல்படையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
இப்படையில் சேரும் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கும். அத்துடன், பணி பாதுகாப்பு, ரூ.1 கோடிக்கான மருத்துவக் காப்பீடு, கேண்டீனில் மானிய விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
கடற்படையிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் முன்னேறுவதுடன், தங்களை சுற்றியுள்ள சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு சோமசுந்தரம் கூறினார். பின்னர், மாணவர்களின் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சோமசுந்தரம் விடை அளித்தார்.