கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு – தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் – பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் அதர்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் யார் பழகுவது என்பதில் செல்வம் மற்றும் சங்கருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு சங்கரின் வீட்டுக்குச் சென்ற செல்வம், அவரையும், அவரது அம்மாவையும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள்

அதையடுத்து சங்கரின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர் திட்டக்குடி போலீஸார். தொடர்ந்து நேற்று மார்ச் 31-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அதர்நத்தம் கிராமத்திலுள்ள செல்வத்தின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இல்லாததால் வயலில் இருந்த அவரது பண்ணை வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.

`ஷாக் ஆன போலீஸார்’

அப்போது பண்ணை வீட்டில் இருந்த செல்வம் உள்ளிட்டவர்கள், போலீஸாரை பார்தததும் தப்பியோடியிருக்கின்றனர். அதையடுத்து அந்த பண்ணை வீட்டை சோதனையிட்ட போலீஸார், அங்கு கட்டு கட்டாக பணமும், துப்பாக்கி மற்றும் அரிவாள்களையும் பார்த்து திகைத்து நின்றிருக்கின்றனர். அப்போது அந்த வீட்டிற்கு வந்த இருவரையும் வளைத்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் இருவரும் செல்வத்திடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓட்டுநர்களாக வேலை செய்து வருவதாக தெரிவித்தனர். உடனே அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், விஷயத்தை மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். உடனே அந்த இடத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த பொருட்களை கைப்பற்றும்படி உத்தரவிட்டார். அதையடுத்து தலைமறைவாக இருக்கும் செல்வம் உள்ளிட்டவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் செல்வம் குறித்த தகவல்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. அதனால் அவரை கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் திராவிட மணி.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்

`அடிதடி வழக்கு விசாரணைக்காக தான் சென்றோம்’

தொடர்ந்து கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட நாம், `செல்வம் வீட்டில் கள்ள நோட்டு அடிக்கப்பட்டதா ?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், “செல்வம் மீது பதிவு செய்யப்பட்ட அடிதடி வழக்கு விசாரணைக்காக போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால் பண்ணை வீட்டுக்குச் சென்றனர் அப்போதுதான் இந்த விவகாரம் போலீஸாருக்கு தெரிய வந்தது.

அங்கிருந்த இரண்டு கலர் ஜெராக்ஸ் மெஷின்கள், 5 வாக்கி டாக்கிகள், ஒரு லேப்டாப், இரண்டு ஏர்கன்கள், ஒரு ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷின், 170 ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், ஒரு செட் போலீஸாரின் யூனிஃபார்ம் போன்றவற்றை கைப்பற்றி, நவீன்ராஜா, கார்த்திக் என்ற இருவரை கைது செய்திருக்கிறோம்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் என்பவர் சென்னையிலும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அங்கு என்ன மாதிரியான தொழிலை செய்து வந்தார் என்பது இனிமேல்தான் தெரிய வரும். அதேசமயத்தில் செல்வம் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து பார்க்கும்போது, அங்கு அவர் கள்ளநோட்டு அச்சடிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. கலர் ஜெராக்ஸ் மெஷினை வைத்து ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, வெள்ளை தாள்களுக்கு மேல் வைத்து நிறைய பணம் இருப்பதைப் போல காட்டி மோசடி செய்திருக்கலாம்.

கைது செய்யப்பட்டவர்களுடன் எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட போலீஸார்

 கள்ள நோட்டு இல்லை, கலர் நோட்டு

`ஒரு நோட்டை இரண்டாக்கி தருகிறோம், மூன்றாக்கி தருகிறோம்’ போன்ற வகை மோசடியாக இருக்கலாம். அதேபோல அவர் வைத்திருந்தது சாதாரண ஏர்கன்தான். அதற்கு லைசென்ஸ் தேவையில்லை. ஜே.கே பாண்ட் பேப்பரில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வெட்டியிருக்கிறார். கள்ள நோட்டு அடிப்பவர்கள் இப்படி ஒரேயொரு கலர் ஜெராக்ஸ் மெஷினை வைத்துக் கொண்டு, ஜெராக்ஸ் எடுக்க மாட்டார்கள். அதனால் இது கள்ள நோட்டு இல்லை, கலர் நோட்டு. அதேசமயம் எப்படி இருந்தாலும் அவர்கள் செய்தது குற்றம்தான்.  அவர்களை கைது செய்து முழுமையாக விசாரணை செய்த பிறகே முழு விபரமும் தெரிய வரும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.