ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருந்தது வருகிறது முதுமலை புலிகள் காப்பகம். அடர் வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியே வரும் சில யானைகள், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன.

அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் சில, ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி அரிசி பருப்பு போன்றவற்றை உட்கொண்டு வருகின்றன. இதனைத் தவிர்க்கும் வகையில் மசினகுடி போன்ற பகுதிகளில் ரேஷன் கடைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கூடலூர், தொரப்பள்ளி ரேஷன் கடைக்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் யானை ஒன்று, ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு செல்கிறது. இன்று அதிகாலை அரிசியை சுவைக்க வந்த அந்த யானை வழக்கம்போல் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து வந்து சுவைத்திருக்கிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் , யானை வந்தது கூட தெரியாமல் இருண்டு நபர்கள் ரேஷன் அருகில் உள்ள நடைபாதையில் படுத்துறங்கியுள்ளனர். அவர்களை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத அந்த யானை, அரிசியை சுவைப்பதிலேயே குறியாக இருந்துள்ளது. இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
தும்பிக்கையால் எட்டிவிடும் தூரத்தில் இருந்தும் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு நபர்களையும் யானை ஒன்றும் செய்யாமல் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.