பனஸ்கந்தா: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தீசா நகரம். இங்குள்ள பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து 18 பேரின் உடல்கள் அகற்றப்பட்டன. பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட இடிபாடுகள் இடையே மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக பனஸ்கந்தா எஸ்.பி அக்ஷயராஜ் மக்வானா தெரிவித்தார். மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் பட்டாசு ஆலையில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குவங்கத்திலும் பட்டாசு விபத்து: மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் பதர்பிரதிமா என்ற பகுதியில் பட்டாசு குடோன் மற்றும் வீடு இருந்த இடத்தில் கடந்த திங்கள் இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.