குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரப்பிரதேசத்தில், குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் புதியதொரு தடாலடி நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியது. இப்படி புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்ட வீடுகளில் பெரும்பான்மையானவை இஸ்லாமிய மக்களுக்குச் சொந்தமானது. இதையடுத்து, `சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்காக பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் புல்டோசர் கலாசாரத்தை தடை செய்யக் கோரி’ உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘புல்டோசர் கலாசாரம் சட்டத்திற்கு புறம்பானது’ எனக் கூறி, உ.பி அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்தனர் நீதிபதிகள்.

இந்தச் சூழலில்தான் தற்போது முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவிலும் ‘புல்டோசர் கலாசாரம்’ பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது, மால்வான் நகரில் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாகக் கூறி, அவனது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்தது மாநகராட்சி நிர்வாகம். இவ்விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

இதே போன்று நாக்பூரில், கடந்த 17-3-2025 அன்று இந்து அமைப்புகள் ஒன்று கூடி ‘முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும்’ என்று கோரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது வன்முறை பரவியது. இந்தக் கலவரம் தொடங்குவதற்கு முன்பு, அது தொடர்பாக சோஷியல் மீடியாவில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு கலவரத்திற்கு வித்திட்டதாகக் கூறி பாஹிம் கான் என்பவர் கைது செய்யப்பட்டதோடு, அவரது இரண்டு மாடி வீட்டையும் நாக்பூர் உள்ளாட்சி நிர்வாகம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது.

உள்ளாட்சி நிர்வாகத்தின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருந்துவரும்போதே, மேற்கொண்டு 50 பேரின் வீடுகளை இடிக்கும் பணியில் உள்ளாட்சி அதிகாரிகள் மும்முரம் காட்டிவந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளனர் நீதிபதிகள். இந்த நிலையில், கடந்த 23-3-2025 அன்று மும்பை கார் ரோட்டில் உள்ள ‘ஹேபிடட் ஸ்டூடியோ’வில் காமெடி நடிகர் குணால் கம்ரா, காமெடி ஷோ ஒன்றை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சர்ச்சைக்குரிய வகையில் (துரோகி) விமர்சித்த காரணத்திற்காக, மறுநாளே சம்பந்தப்பட்ட ஸ்டூடியோவை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளியிருப்பதற்கு நாடு முழுக்க கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

முன்னதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியினர் இந்த ஸ்டூடியோவிற்குள் புகுந்து அடித்துச் சூறையாடியிருந்தனர். இதையடுத்து ஹேபிடெட் ஸ்டூடியோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நடந்த சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட கலைஞர்கள்தான் பொறுப்பு. இதில் எங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் நாங்கள் இலக்காகிறோம். எனவே, ஸ்டூடியோவை தற்காலிகமாக மூடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குணால் கம்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது. யார் சொல்லியும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். கோர்ட் சொன்னால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மும்பை போலீஸார் மும்பையில் நடந்த குணால் கம்ராவின் காமெடி ஷோவில் பங்கேற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி வருகின்றனர். இதனை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.