IPL 2025, RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் முதல்முறையாக போட்டி நடைபெறுகிறது.
RCB vs GT: பெரிய நம்பிக்கையுடன் வரும் ஆர்சிபி
இரு அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்று தற்சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணி 4வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளின் மோதல் ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளது.
கடந்த 2 போட்டிகளையும் அவே மைதானங்களில் விளையாடிய ஆர்சிபி, தற்போது ஹோம் மைதானத்திற்கு திரும்பி உள்ளது. அதுவும் சிஎஸ்கேவை அதன் கோட்டையான சேப்பாக்கத்திலேயே 17 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தியிருப்பதால் பெரும் நம்பிக்கை உடன் ஆர்சிபி களமிறங்குகிறது. இந்த அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு.
RCB vs GT: ஆர்சிபி பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது
பில் சால்ட் – விராட் கோலி ஜோடி அதிரடி காண்பிக்க, படிக்கல் – பட்டிதார் – லிவிங்ஸ்டன் – ஜித்தேஷ் – டிம் டேவிட் – குர்னால் பாண்டியா பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். புவனேஷ்வர் குமார் – யாஷ் தயாள் – ஹேஸல்வுட் வேகப்பந்துவீச்சில் மிரட்ட சுயாஷ் சர்மா கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக இம்பாக்ட் வீரராக வருவார் எனலாம்.
RCB vs GT: குஜராத் பிளேயிங் லெவனில் மாற்றம்
குஜராத் அணி முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோற்றாலும் அடுத்து மும்பை வீழ்த்தியிருக்கிறது. பஞ்சாப் போட்டியும் கூட 244 ரன்கள் இலக்கை, 11 ரன்கள் வித்தியாசத்திலேயே தவறவிட்டது. பேட்டிங் பலமாக இருந்தாலும், 2வது போட்டியில் பேட்டிங் பலப்படுத்திக்கொண்டது குஜராத் டைட்டன்ஸ்.
இந்த போட்டியில் இஷாந்த் சர்மாவுக்கு பதில் நிஷாந்த் சிந்து, குர்னூர் சிங் பிரார் அல்லது வாஷிங்டன் சுந்தரை குஜராத் சேர்க்கலாம். ரூதர்போர்டுக்கு பதில் பிலிப்ஸை விளையாட வைக்கலாம்.
RCB vs GT: மிரட்டும் பந்துவீச்சு
சிராஜ் – பிரசித் கிருஷ்ணா – ரபாடா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மிரட்டுவார்கள். சுழற்பந்துவீச்சில் ரஷித் கான் – சாய் கிஷோர் உள்ளனர். இம்பாக்ட் வீரராக வேகப்பந்துவீச்சாளரையோ, சுழற்பந்துவீச்சாளர் ஒருவரையோ சூழலுக்கு ஏற்ப எடுக்கலாம்.
RCB vs GT: ஆட்டம் காட்டும் பேட்டர்கள்
சாய் சுதர்சன் – கில் – பட்லர் ஆகியோர் கடந்த 2 போட்டிகளிலும் பலமான ஓபனிங்கை கொடுத்துள்ளார். ஆர்சிபி இவர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். மிடில் ஆர்டரில் அதிரடி காட்ட ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா உடன் பிலிப்ஸ் கைக்கோர்ப்பார் எனலாம். ரஷித் கானும், ரபாடாவும் பேட்டிங்கில் கைக்கொடுப்பார்கள்.
RCB vs GT: விராட் கோலி vs சிராஜ்
இதில், ஹேஸல்வுட் vs சாய் சுதர்சன், புவனேஷ்வர் குமார் vs சுப்மான் கில், ரஷித் கான் vs ரஜத் பட்டிதார் உள்ளிட்ட மேட்ச்-அப்கள் இருக்கிறது என்றாலும், விராட் கோலி vs சிராஜ் மேட்ச்-அப் தான் பெரிதும் எதிர்பார்ப்புகளை கிளிப்பியிருக்கிறது. இந்த போட்டியின் மீது சுவாரஸ்யம் அதிகமாகியிருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.
அதுவும், சிராஜ் பெங்களூருவில் பந்துவீசி பெரிய அனுபவம் இருக்கிறது என்பதால் நாளைய போட்டியில் வெற்றிபெறப்போவது பெங்களூரா, குஜராத் அணியா என்பதை விட மேட்ச்-அப்பில் வெற்றிபெறப்போவது விராட் கோலியா அல்லது சிராஜா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.