இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
ஜப்பானைச் சேர்ந்த ‘ஸ்டூடியோ கிப்லி’ என்ற நிறுவனம் தயாரித்த அனிமேஷன் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்த கிப்லி ஸ்டைல் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கற்பனையாக நினைக்கும் மன ஓட்டங்களுக்கு உருவம் கொடுப்பதால், இந்த கிப்லி ஆர்ட் அனைவரையும் கவர்ந்து விடுகிறது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தில் நம்முடைய சாதாரண டிஜிட்டல் புகைப்படங்களை சில நொடிப்பொழுதில் கிப்லி அனிமேஷன் புகைப் படங்களாக மாற்றிவிடும் அப்டேட் வந்துள்ளது. அந்த அப்டேட்தான் இன்றைய சமூக வலைதளங்கள் முழுவதும் கிப்லி புகைப்படங்களாக நிறைய வைத்துள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தில் சாட் ஜிபிடி(Chat GPT) மூலமும், எலன் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் உள்ள ‘க்ரோக்’ (Grok) மூலமும் இந்த கிப்லி அனிமேஷன் புகைப் படங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் செய்துவிட முடிகிறது. இதில், டிஜிட்டல் புகைப்படங்களை உள்ளீடு செய்து, கிப்லி அனிமேஷனாக மாற்றக் கோரினால், சில நொடிகளில் தயாரித்து கொடுக்கிறது. இது பார்ப்போரை கவரும் வண்ணம் உள்ளதால், அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் இந்த கிப்லி அனிமேஷன் புகைப்படங்கள் அரசியல்வாதிகளையும் கவர்ந்துள்ளன. இந்திய அரசின் MyGov, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 15 படங்கள் கிப்லி அனிமேஷனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ளன. இதில், அவர் இந்தியக் கொடியை ஏந்தியிருப்பது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தது, அயோத்தியில் உள்ள ராம் லல்லா சிலைக்கு முன் உரை நிகழ்த்துவது, வணங்குவது என பல புகைப்படங்கள் கிப்லி அனிமேஷனாக பதிவிடப்பட்டுள்ளன.
இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும் கிப்லி பாணி புகைப்படத்தையும், பாஜக தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த வைரல் ட்ரெண்டிங்கில் களம் இறங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சி சமூக வலைதள பக்கத்தில் “சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இந்தியாவுடன் இணைவதற்கான காங்கிரஸின் பயணம்” என மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரின் படங்கள் கிப்லி அனிமேஷன் படங்களாக பதிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் இந்த கிப்லி ட்ரெண்டிங்கில் இணைந்து அசத்தியுள்ளார். கிப்லி பாணியிலான தனது புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “தமிழகத்தின் இதயத்தில் இருந்து ஸ்டுடியோ கிப்லி உலகம் வரை- எனது மிகவும் மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
கிப்லி அனிமேஷன் ட்ரெண்டிங்கில் உள்ளதால், பல தனியார் நிறுவனங்களும் இந்த கிப்லி புகைப்படங்களை மாற்றும் செயலியை உருவாக்கி வருகின்றன. எனவே, இந்த செயலிகளில் தங்களது தரவுகளை உள்ளீடு செய்யும்போது, தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.