கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

வரும் 2028ம் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்களது நம்பிக்கை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது இல்லாமல், அரசியலில் கடுமையாக உழைத்து அனுபவ ரீதியாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்.
சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும். சினிமாவில் முன்பெல்லாம் கருத்துள்ள படங்களை முன்னிறுத்தி வெளியிட்டனர். ஆனால், தற்போது வரக்கூடிய படங்கள் கருத்து இல்லாத வகையில் இருக்கிறது. சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல், மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக்கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்” என்றார்.