சென்னை: “தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழக அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் பதிவுத்தறையின் தொடர் நடவடிக்கையால் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களில் சொத்து மதிப்பை 50% முதல் 60% வரை உயர்த்தியுள்ளது. புதிதாக உருவாக்கவுள்ள மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினால் மனைப்பிரிவுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் உள்ளது.
ஆனால் ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பை 50% முதல் 60% வரை உயர்த்தியுள்ள நிலையில் மீண்டும் மாவட்ட பதிவாளர் அவர்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய மதிப்பில் இருந்து மேலும் 30% முதல் 50% வரை சேர்த்து அதிகபட்சமாக மதிப்பு நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. நடுத்தர மக்கள் தங்களது சேமிப்பில் ஒருகுறிப்பிட்ட தொகையில் வீட்டுமனை வாங்க நிர்ணயம் செய்து இருந்த மக்களால் திடீர் என்று கூடுதல் தொகை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அவர்கள் கனவு நிறைவேறாமல் போகிறது.
தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழக அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.