மும்பை,
ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை 12.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் ஒரு குழுவாக அனைவரும் ஒத்துழைத்த விதத்தை பார்க்கும்போது இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சியிருக்கிறது. எங்கள் அணியில் ஒரு வீரரை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சவாலானது.
இந்த ஆடுகளத்தை பொறுத்தவரை அஸ்வனி குமார் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நினைத்தோம். முதலில் இதன் அடிப்படை அனைத்துமே மும்பை ஸ்கவுட்களால் ஆனது தான். மும்பை தேர்வு குழு அனைத்து இடங்களுக்கும் சென்று இளம் வீரர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
நாங்கள் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது அஸ்வனி குமார் லேட் ஸ்விங் மற்றும் அற்புதமான லைன் மற்றும் லென்த்தை கொண்டிருந்தார். வித்தியாசமான ஆக்சன் மற்றும் ஒரு இடது கை பவுலராக இருந்தார். குறிப்பாக அவர் ரசலின் விக்கெட்டை எடுத்த விதம் மற்றும் டி காக்கை கேட்ச் பிடித்து வெளியேற்றிய விதம் இரண்டுமே அற்புதமாக இருந்தது. ஒரு குழுவாக நாங்கள் செயல்பட்டதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.