டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ்

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை 12.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பையின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 5வது வீரராக சூர்யகுமார் (8,007 ரன்) இணைந்துள்ளார்.

இந்தப்பட்டியலில் விராட் கோலி (12,976 ரன்), ரோகித் சர்மா (11,851 ரன்), ஷிகர் தவான் (9,797 ரன்), சுரேஷ் ரெய்னா (8,654 ரன்) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.