சென்னை: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 770 கிலோ மீட்டர் நீள சாலைகள் அகலப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
> உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்துதல், ஆற்றுப்பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
> முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் 220 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாகவும், 550 கிலோ மீட்டர் நீள சாலைகள் இருவழிச்சாலைகளாகவும் (மொத்தம் 770 கிலோ மீட்டர் நீள சாலைகள்) ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.
> முதல்வரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.466 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலங்கள் கட்டப்படும்.
> சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர் மற்றும் ஓசூர் மாநகரில் ரூ.550 கோடி செலவில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.
> தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி , நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையம், கடலூர் மாவட்டம் முட்டம் பாலம் ஆகிய 3 இணைப்பு சாலைகள் ரூ.230 கோடி செலவில் அமைக்கப்படும்.
> மதுரை பழங்காநத்தம், காவல்கிணறு – ராதாபுரம் சாலை, விருதுநகர் திருத்தங்கல், சென்னை தாம்பரத்தை அடுத்த மறைமலைநகர் – சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட 10 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும், சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் ரயில்வே கீழ்பாலமும் ரூ.787 கோடி மதிப்பீட்டில் ரயில்வே திட்டப்பணிகளின் மூலம் கட்டப்படும்.
> திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அருகில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
> கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1,000 கிலோ மீட்டர் நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
> சுற்றுலா மேம்பாட்டுக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஏவகிரி மலையில் ரூ.15 கோடி செலவில் 10 கிலோ மீட்டர் நீள சுற்றுச்சாலை மேம்படுத்தப்படும்.
> எண்ணூர்- பூஞ்சேரி வரையிலான கடல்வழி இணைப்புப்பாலம், கோபிச்செட்டிப்பாளையம் இணைப்புச்சாலை அமைக்க ரூ.4 கோடி மதிப்பீட்டில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
> கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஓசூர் ஆகிய இடங்களில் ரூ.21.9 கோடி மதிப்பீட்டில் புதிதாக 4 சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும்.
> கல்வராயன்மலை, ஏற்காடு, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் ரூ.9.5 கோடி செலவில் புதிதாக 3 ஆய்வு மாளிகைகள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.