புதுடெல்லி: ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, அக்டோபர் 9, 2024 உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருந்தார். அதில், டாடா சன்ஸ் பங்குகள் உட்பட தனது செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுச் சென்றார்.
அதே நேரத்தில், அவர் தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ஊழியர்கள் மற்றும் தனது அன்பான செல்லப்பிராணிகளை கூட மறக்கவில்லை. செவ்வாய்க்கிழமை தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயில் விவரங்கள் வெளிவந்தன, இது அவரது ரூ.3,800 கோடி சொத்துகள் பகிர்ந்தளிக்கப்பட்டதைக் காட்டுகிறது.
மேலும், எனது இந்த கடைசி உயிலை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றால், அந்த நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்பப் பெறப்படும். எனது சொத்தின் எந்த பகுதியிலும் அந்த நபருக்கு எந்த உரிமையும் கிடையாது என பிப்ரவரி 23, 2022 அன்று கையொப்பமிடப்பட்ட உயில் கூறுவதாக தெரிகிறது.
அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்து இருந்தார். நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி, டாடாவின் 82 வயது சகோதரர் ஜிம்மி நேவல் டாடாவும் உயிலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது ரத்தன் டாடாவின் உயிலை நிறைவேற்றுபவர்கள் அதை உறுதிப்படுத்த மும்பை நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம் சரிபார்க்கிறது.
டாடாவின் விலங்குகள் மீதான அன்பு நன்கு அறியப்பட்டது தான், மேலும் அவரது உயில் அதை பிரதிபலிக்கிறது. அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கி, அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.30,000 பெறுவதை உறுதி செய்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, டாடாவின் வெளிநாட்டு சொத்துகள் சுமார் ரூ.40 கோடி மதிப்புடையவை என கூறப்படுகிறது. அவரது தனிப்பட்ட ஆடம்பர கடிகாரங்களின் தொகுப்பும் உயிலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் Bvlgari, Patek Philippe, Tissot மற்றும் Audemars Piguet போன்ற பிராண்டுகள் உட்பட 65 கடிகாரங்கள் உள்ளன.