சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவு செய்து அதிகமானோர் சம்பாதிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்று சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. அந்த வீடியோ சில நேரங்களில் அதனை வெளியிட்டவர்களுக்கே பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
சண்டிகரில் ஒரு பெண் அது போன்று ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது கணவரின் வேலைக்கு குழி பறித்துவிட்டார்.

சண்டிகரில் சீனியர் கான்ஸ்டபிளாக இருப்பவர் அஜய். இவரது மனைவி ஜோதி. சமூக வலைத்தளத்தில் ஜோதிக்கு அதிக ஈடுபாடு உண்டு. தனது மைத்துனி பூஜாவுடன் ஜோதி அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளார். வரும்போது முக்கிய சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக வாகனங்கள் காத்து நின்றது.
அந்த நேரம் ஜோதி தனது மைத்துனியிடம் சொல்லி நான் நடனமாடுகிறேன். வீடியோ எடு என்று சொல்லி விட்டு சாலை சிக்னல் ஜிப்ரா கிராஸிங்கில் பிரபலமான ஒரு இந்தி பாடலுக்கு ஜோதி நடனமாடினார். அவர் நடனமாடியதை பூஜா வீடியோ எடுத்தார்.
இதனால் வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் அப்படியே சாலையில் நின்றன. வாகன ஓட்டிகள் நடனத்தை கண்டுகளித்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஜோதி தான் ஆடிய வீடியோவை தனது கணவர் அஜயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ உடனே வைரலானது. இது போலீஸாரின் கவனத்திற்கு சென்றது. தலைமை கான்ஸ்டபிள் ஜஸ்பிர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூராக நடந்து கொண்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக ஜோதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வீடியோ அஜய் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியிடப்பட்டு இருந்ததால் அஜய் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜோதி மற்றும் பூஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மனைவியின் செயலுக்கு கணவன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். சிலர் ஜோதி செய்தது ஒன்றும் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
