புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் கூறுகையில், “வக்பு திருத்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், ஏனெனில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து விஷயங்களிலும் தலையிட விரும்புகிறது. எல்லா இடங்களையும் அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு அல்லது வேறு எந்த முடிவாக இருந்தாலும் சரி, அவர்கள் (பாஜக) மற்றவர்களிடமிருந்து அல்லது மக்களிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்கவே விரும்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் சமாதான அரசியலில் ஈடுபடுகிறோம் என்று பாஜக குற்றம்சாட்டுகிறார்கள்.
ரமலான் பண்டிகையின் போது அவர்கள் பரிசுப் பெட்டகங்களைக் கொடுத்தது சமாதான அரசியல் இல்லையா? இதுவரை இந்துக்களைத் தவறாக வழிநடத்தி வரும் பாஜக, இப்போது முஸ்லிம்களையும் தவறாக வழிநடத்த ஆரம்பித்திருக்கிறது.” என்றார். மேலும் வக்பு திருத்த மசோதாவுக்கு அஜ்மீர் தர்கா ஆதரவு தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அகிலேஷ், “பாஜகாவல் யாரையும் அவர்களுக்கு சாதகமாக பேசவைக்க முடியும், செயல்படவைக்க முடியும் அது அவர்களின் சாதனை” என்றார்.
முன்னதாக, சூஃபி சஜ்ஜதன்ஷின் கவுன்சிலின் (ஏஐஎஸ்எஸ்சி) தலைவரும், ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவின் மதத்தலைவருமான சையித் நஸ்ருத்தின் சிஷ்டி திங்கள்கிழமை கூறுகையில், “இந்திய அரசு கொண்டுவரும் வக்பு திருத்த மசோதா ஏற்கனவே அதன் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பொறுமையாக கேட்ட பின்பு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
வரவிருக்கம் மசோதா நன்மைபயக்கும் என நான் நம்புகிறேன். தற்போது இருக்கும் வக்பு சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்காக யாரும் அச்சப்படவேண்டியதில்லை. நாம் அதிகாரபூர்வமான அறிக்கைகளையே நம்ப வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது தவறானது.” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அஜ்மீர் தர்கா தலைவரின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினருமான இம்ரான் மஸ்தூத், “பாஜக இந்த தரகு வேலையை நிறுத்த வேண்டும்” என்று சாடியுள்ளார்.