“கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்” என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம், தனக்கன்குளம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி திமுக பிரமுகர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்த நிலையில் சிறையிலுள்ள வெள்ளைக்காளியின் தாயாரான ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், மதுரை நந்தகுமார், காமராஜபுரம் நவீன்குமார், சென்னையைச் சேர்ந்த கார்த்திக், திருப்பூரைச் சேர்ந்த அசன் ஆகிய 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
இதனிடையே கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை மதுரை அருகே பிடிக்க சென்றபோது துப்பாக்கியால் சுட வந்ததால், என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து சுபாஷ் சந்திரபோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டடது.
பின்னர் என்கவுன்ட்டர் தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸின் உடலை உடற்கூறாய்வு அறையில நேரில் பார்த்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் சந்திரபோஸின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சுபாஷின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்த பின்னர் உடற்கூறாய்வு தொடங்கியது.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன், “எனது மகன் வேறொரு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வந்து கையழுத்திட்டு வந்தான். அந்த நேரம் ‘கிளாமர் காளி கொலை செய்யப்பட்டுள்ளதால் நீ வெளியில் வந்தால் அந்த கொலை வழக்கில் உன்னை கைது செய்துவிடுவார்கள்’ என உளவுத்துறை போலீஸ் ஒருவர் எச்சரித்ததால் சுபாஷ் வெளியூரில் இருந்தான். திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில் அவனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தோம். ஆனால் போலீஸ் என்கவுன்ட்டர் செய்துவிட்டது.

என் மகன் தவறே செய்திருந்தாலும் காலில் சுட்டிருக்கலாம், எதற்காக கொல்ல வேண்டும்? திட்டமிட்டு எனது மகனை காவல்துறையினர் கொலை செய்துவிட்டனர். என் மகன் நேற்று காலை வரை வீடியோ காலில் எங்களுடன் பேசினான். ஆனால், காவல்துறையினர் என் மகனை வேறு எங்கோ பிடித்து சுட்டுவிட்டு மதுரையில் வந்து போட்டுவிட்டனர். இதுவரை எனக்கு எந்த தகவலும் போலீஸ் கூறவில்லை. உரிய விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையினர் பேர் வாங்க கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்பில்லாத என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். உறவினர்களான எங்கள் இரு தரப்பினரிடையே காவல்துறைதான் மோதலை ஏற்படுத்தி வருகிறது.” என்றார்.
இதனால் ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெறும் இடத்தில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.