மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக பேசிய கிரண் ரிஜிஜு, “நாளை (ஏப்.2), வக்பு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவருகிறோம். அதற்காக விவாதத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் மக்களவை ஆலோசனைக் குழு கூட்டத்தில் முன் முன்மொழிந்தேன். விவாதத்துக்கான மொத்த நேரம் எட்டு மணிநேரமாக இருக்கும். இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தேவைப்படின், அவையின் கருத்தை அறிந்து நேரம் நீட்டிக்கப்படலாம்.

நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. மேலும், எந்த அரசியல் கட்சி சட்டத் திருத்த மசோதாவில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை நாடு அறிய விரும்புகிறது. அவர்கள் (எதிர்க்கட்சிகள்) ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி விவாதத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்றால், நான் ஒன்றும் செய்ய முடியாது,” என்று தெரிவித்தார்.

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், “நாங்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். அவர்களின் (மத்திய அரசு) மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சபாநாயகர் இதையெல்லாம் கவனிப்பார் என்று நம்புகிறேன். மக்களவையில் ஜனநாயகத்தின் குரல் எவ்வாறு மெதுவாக நசுக்கப்படுகிறது என்பதை முழு நாடும் காண்கிறது.

அரசு தனது நிகழ்ச்சி நிரல்படி செயல்படுவதில் உறுதியாக இருக்கிறது. அதோடு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் மக்களவை ஆலோசனைக் குழு கூட்டத்தின் நடுவில் வெளிநடப்பு செய்தன. வக்பு திருத்தச் சட்டம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுள்ளோம். இதற்கு முன்பு, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஒதுக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்தாம். ஆனால் எங்கள் ஆலோசனை கேட்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து, பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் தலைமையில் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க பரிசீலிக்கப்பட்டது.

வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதிலும் நிர்வகிப்பதிலும் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக 1995-ஆம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும். முந்தைய சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும், சட்டத்தின் மறுபெயரிடுதல், வக்பின் வரையறைகளைப் புதுப்பித்தல், பதிவு செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் வக்பு பதிவுகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கை அதிகரிப்பது போன்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வக்பு வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.