புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்று வேதனை தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜ் நகரில் உள்ள தங்கள் வீடுகளை உத்தரப் பிரதேச அரசும், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையமும் இடித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பிரயாக்ராஜ் நகரத்தில் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட மாநில அரசு மற்றும் நகர மேம்பாட்டு ஆணையத்தின் செயல் மனிதாபிமானமற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும்கூட.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருக்கிறது. குடிமக்களின் குடியிருப்பு கட்டமைப்புகளை இதுபோன்ற முறையில் இடிக்க முடியாது. இது எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது. தங்குமிட உரிமை, சட்டப்பூர்வமானது. எனவே, வீட்டு உரிமையாளர்களுக்கு ஆறு வாரங்களுக்குள் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மாநில அரசின் இந்த செயல், அதிர்ச்சியூட்டக்கூடிய, தவறான சமிக்ஞையை அனுப்புகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2023-ஆம் ஆண்டு போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் – அரசியல்வாதி அதிக் அகமதுவுக்கு சொந்தமானது என்று நினைத்து மாநில அரசு வீடுகளை தவறாக இடித்தது என தெரிவித்தார். எனினும், பிரயாக்ராஜ் மாவட்டத்தின் லுகர்கஞ்சில் உள்ள சில கட்டுமானங்கள் தொடர்பாக மனுதாரர்களுக்கு மார்ச் 6, 2021 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.
‘புல்டோசர் நடவடிக்கை’யின் பின்னணி என்ன? – வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை, அரசு நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கான அடையாளமாக புல்டோசர் நடவடிக்கைகள், ஆட்சியாளர்களால் – குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளால் – முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய இரு நபர் அமர்வு இப்படியான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
2017-இல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர் கலாச்சாரத்தைத் தொடங்கியது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி என இந்தப் போக்கு விரிவடைந்தது. கல்வீச்சு சம்பவங்கள், ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
இதுவரை ஏறத்தாழ 1.5 லட்சம் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக வீடிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் 7.38 லட்சம் பேரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள், விளிம்புநிலை மக்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் ‘தவறு செய்தவர்களுக்கு உடனடித் தண்டனை’ என்ற பெயரில் இதை ஆதரிக்கும் போக்கும் அதிகரித்தது.
இந்தச் சூழலில், நிர்வாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இப்படியான நடவடிக்கைகளில் இறங்குவதைத் தடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு 2024 செப்டம்பர் 17-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 13-இல் தனது இறுதித் தீர்ப்பில் ‘புல்டோசர் நீதி’யை உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படக் கூடாது; அவர்களின் வீடுகளும் இடிக்கப்படக் கூடாது’ என நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.