மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை 12.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் ஏற்பட்டே சொதப்பலே தோல்விக்கு காரணம் என கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது எங்கள் அணியின் பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக உண்டான தோல்வி ஆகும். நான் டாசில் குறிப்பிட்டது போல இது பேட்டிங் செய்ய ஒரு அற்புதமான விக்கெட்டாக இருந்தது. இந்த விக்கெட்டில் 180 முதல் 190 ரன்கள் வரை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
இந்த ஆடுகளம் நல்ல ஒரு பவுன்ஸ் கொண்ட ஆடுகளமாகும். நீங்கள் ஒரே நேரத்தில் பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்தி விளையாட வேண்டும். இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் மிக வேகமாக கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த அளவு எதிர் அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்தனர். ஆனால் ஸ்கோர் போர்டு பலகையில் எதிர்பார்த்த ரன்கள் இல்லை.
நாங்கள் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். பவர்பிளேவில் மொத்தமாக நான்கு விக்கெட்டுகள் இழந்தோம். எங்கள் அணியில் கடைசி வரை நிலைத்த நின்று விளையாட ஒரு பேட்ஸ்மேன் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.