சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் ஏப்.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) மாற வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக கவுன்ட்டர்களில் பயணிகள் வரிசையில் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்க, சிஎம்ஆர்எல் பயண அட்டை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்த அட்டையை பயன்படுத்தும்போது, 20 சதவீதம் கட்டண தள்ளுபடி கிடைக்கும்.
இதனிடையே, தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) மெட்ரோ ரயில் நிறுவனம் 2023-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், எஸ்பிஐ வழங்கிய சிங்கார சென்னை அட்டைக்கு ஏப்.1-ம் தேதி முதல் முழுமையாக மாற திட்டமிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கும் பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பயண அட்டை இன்றுமுதல் முழுமையாக மாற இருப்பதை கருத்தில்கொண்டு, ஆலந்தூர் உட்பட பல்வேறு மெட்ரோ ரயில் நிலைய கவுன்ட்டர்களில் பயண அட்டையில் உள்ள மீதித் தொகை திருப்பித் தருமாறு பயணிகள் கேட்டனர். ஆனால், பழைய அட்டையில் உள்ள தொகையை பயணம் மேற்கொண்டு கழிக்குமாறு ஊழியர்கள் பதிலளித்தனர். இதனால், பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து, பயணிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் பயண அட்டையில் ரூ.2 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து வைத்துள்ளோம். ஏப்.1-ல் இருந்து சிங்கார சென்னை அட்டைக்கு மாற வேண்டும் என தெரிவித்தனர். மெட்ரோ ரயில் பயண அட்டையை தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துகிறோம்.
தற்போது இந்த அட்டையில் ரூ.1,000-க்கும் மேல் மீதித் தொகை உள்ளது. எனவே, இத்தொகையை திருப்பி தர வேண்டும் அல்லது சிங்கார சென்னை அட்டைக்கு இத்தொகையை மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பயண அட்டையில் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்த பிறகு, சிங்கார சென்னைக்கு அட்டைக்கு மாற்ற வேண்டும். அதுவரை, மெட்ரோ ரயில் பயண அட்டையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் 2 மாதம் செல்லுபடியாகும்: இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிங்கார சென்னை அட்டைக்கு மாற பயணிகளை ஊக்கப்படுத்துகிறோம். இந்த பயண அட்டையில் தொகை பூஜ்ஜியம் நிலைக்கு வந்தபிறகு, அவர்களுக்கு ரீசார்ஜ் செய்யாமல், அதற்கு பதிலாக சிங்கார சென்னை அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரயில் பயண அட்டையை நிறுத்தி வைக்கவில்லை. மாறாக, படிப்படியாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம். எனவே, பழைய பயண அட்டையில் இருந்து சிங்கார சென்னை அட்டைக்கு மாற, மேலும் 2 மாதங்கள் வரை கால நீட்டிப்பு செய்யப்படும்” என்றனர்.