ரெனால்ட் நிசான் இந்திய (Renault Nissan Automotive India Private Ltd – RNAIPL) கூட்டு ஆலையில் 51 % நிசான் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் முழுவதுமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் கையகப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் சென்னை ஆலையின் 100% உரிமையை கொண்டிருக்கும். ஆனால் நிசான் கார்கள் தயாரிப்பில் எந்த மாற்றும் இருக்காது.
அதேநேரத்தில் ரெனால்ட் நிசான் இந்திய தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் (Renault Nissan Technology & Business Center India – RNTBCI) பங்களிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. மேலும், நிசான் மேக்னைட் தயாரிப்பு மற்றும் எம்பிவி, எஸ்யூவி , இவி போன்ற எதிர்கால மாடல்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் மாற்றமும் இல்லை.
புதிய ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த நிசான் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இவான் எஸ்பினோசா, “எங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு உயர்மட்ட விற்பனை மற்றும் சேவையை தொடர்ந்து உறுதி செய்வதுடன் அதே வேளையில், உள்ளூர் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை வழங்குவதில் நாங்கள் இந்திய சந்தைக்கு உறுதிபூண்டுள்ளோம்.
எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் மற்றும் பிற அறிவு சார்ந்த சேவைகளுக்கான மையமாக இந்தியா விளங்குவதுடன், இந்திய சந்தைக்கான புதிய கார் அறிமுகங்களில் எங்கள் திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், இந்தியாவிற்கான “ஒரு கார், ஒரு உலகம்” வணிக உத்தியின் கீழ் மற்ற சந்தைகளுக்கு எங்கள் வாகன ஏற்றுமதியைத் தொடருவோம்” என குறிப்பிட்டார்.
ரெனால்ட்டின் ஆம்பியர் மின் வாகனங்களுக்கான பிராண்டில் நிசானின் ரெனால்ட் ட்விங்கோ மின்சார வாகனம் 2026ல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மேலும், நிசான் ஆம்பியர் பிராண்டின் முதலீடு திட்டங்களிலிருந்து வெளியேறுகின்றது.