புதுடெல்லி: வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும் கடந்த 2021-ம் ஆண்டில் 25 ஆகவும் குறைந்தது.அண்மையில் வெளியான புள்ளிவிவரங்களின்படி 12 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட் ஆதிக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மாவோயிஸ்ட் தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்த லட்சியத்தில் முக்கிய மைல் கல்லை எட்டி உள்ளோம், தற்போதைய நிலவரப்படி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6 ஆக குறைந்திருக்கிறது. வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்பேரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அந்த மாநிலத்தில் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.