மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமான மும்பை அணியின் 23 வயது வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதுவும், முதல் பந்திலேயே கொல்கத்தா கேப்டன் ரஹானேவை வீழ்த்தி, அடுத்தடுத்த ஓவர்களில் ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ஆன்ட்ரே ரஸல் ஆகியோரை வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பினார். மொத்தமாக இந்தப் போட்டியில், 3 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
யார் இந்த அஸ்வனி குமார்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வனி குமார் 2022-ம் ஆண்டு சையது முஷ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார். அந்த சீசனில் நான்கு போட்டிகளில் மட்டும் விளையாடி, மொத்தமாக மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதையடுத்து, பஞ்சாப்பின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெர்-இ-பஞ்சாப் டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சற்று பிரபலமானார் அஸ்வனி குமார்.

கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் கூட ஆட வைக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணியால் குறிவைக்கப்பட்டு ரூ. 30 லட்சத்து வாங்கப்பட்டார். இப்போது தனது முதல் போட்டியிலேயே தான் யார் என்பதற்கான டீசரைக் காட்டியிருக்கிறார் அஸ்வனி குமார். இனி மெயின் பிக்சரை பல்தான்ஸ் பட்டறை பார்த்துக்கொள்ளும்.