இந்தியன் பிரீமியர் லீக் உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடராக உள்ளது. உலக அளவில் மற்ற லீக் போட்டிகளை விட அதிக பணம் ஈட்டும் தொடராக இருப்பதால் உலக அளவில் உள்ள பல வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த தொடரில் இடம் பெற்று வருகின்றனர். நட்சத்திர வீரர்களைத் தாண்டி நட்சத்திர பயிற்சியாளர்களும் ஐபிஎல்லில் உள்ளனர். அவர்களின் அனுபவம் மற்றும் திறமையை வைத்து தங்களது அணிகளை வெற்றி பெற செய்கின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென்னாபிரிக்கா அணிகளில் இருக்கும் முன்னணி வீரர்கள் தற்போது ஐபிஎல் அணிகளில் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஐபிஎல்லில் வாங்கும் சம்பளம் மற்றும் அவர்களின் நிகர சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை பார்ப்போம்.
மேலும் படிங்க: தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!
ஐபிஎல்லில் மதிப்புமிக்க பயிற்சியாளர்கள்
ராகுல் டிராவிட்: இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வாங்கி கொடுத்த ராகுல் டிராவிட் இந்திய அணி முக்கியமான வீரர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணிவாற்றி வரும் இவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் ராகுல் டிராவிட் நிகர சொத்து மதிப்பு 320 கோடி ரூபாய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜஸ்டின் லாங்கர்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜஸ்டின் லாங்கர் தற்போது லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். 2021 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளராக இருந்த இவர் தற்போது ஐபிஎல்லில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐபிஎல் உரிமையாளர்கள் ரூபாய் 4 கோடி சம்பளமாக கொடுக்கின்றனர். இவரின் மொத்த சொத்து மதிப்பு 90 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.
மகேந்திர ஜெயவர்த்தனா: இலங்கை அணி முன்னாள் வீரர் மகேந்திர ஜெயவர்த்தனா தற்போது மும்பை அணிக்காக பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு 80 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கின்றனர்.
ரிக்கி பாண்டிங்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார். நீண்ட காலமாக ஐபிஎல்லில் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் இவர் ஓராண்டுக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். கிரிக்கெட்டை தாண்டி பல தொழில்களை நடத்தி வரும் இவரின் சொத்து மதிப்பு 800 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.
டேனியல் வெட்டோரி: நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவருக்கு ஹைதராபாத் ரூபாய் மூன்று கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கிறது. இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஸ்டீபன் பிளமிங்: ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர்களில் ஒருவராக நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியாளராக இருக்கும் இவருக்கு சென்னை அணி ரூ. 5 கோடி சம்பளமாக கொடுக்கிறது. மேலும் இவரின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு ரூபாய் 70 கோடி என்றும் கூறப்படுகிறது.
ஆசிஷ் நெக்ரா: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். போட்டியின் போது பவுன்டரிகளில் நின்று கொண்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் இவர் வீடியோக்கள் எப்போதும் இணையத்தில் டிரெண்டாகும். இவருக்கு குஜராத் அணி ரூ. 3 கோடி சம்பளமாக கொடுக்கிறது. மேலும் இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 50 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.
மேலும் படிங்க: MI vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த அறிமுக வீரர்.. யார் இந்த அஷ்வானி குமார்?