‘மும்பையின் அறிமுக வீரர்கள்!’
மும்பை இந்தியன்ஸ் அணி சீசனின் தொடக்கத்திலேயே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. மூன்று போட்டிகளில் ஆடி ஒன்றில் தான் வென்றிருக்கிறார்கள். அதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஆடிய மூன்று போட்டிகளுக்குள் மூன்று இளம் வீரர்களை அணிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். விக்னேஷ் புத்தூர், சத்யநாராயண ராஜூ, அஸ்வனி குமார் என அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் மூவரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருக்கிறார்கள்.

ஐ.பி.எல் மொத்தமாக ஸ்டார் வீரர்களை நம்பி நகர்ந்து கொண்டிருக்கையில், மும்பை அணி அனுபவமே இல்லாத இளம் வீரர்களை நம்பி வளர்த்தெடுப்பது நிச்சயமாக ஆச்சர்யம்தான். மும்பை அணி காலங்காலமாகவும் இதை செய்து வருகிறது. காரணம், அவர்கள் வலுவாக கட்டமைத்து வைத்திருக்கும் ‘Scouting Team’ (திறன் தேடும் குழு). அவர்களின் நுணுக்கமான தேடலின் பலனாகத்தான் இந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள்.
‘திறன் தேடும் குழுவின் செயல்பாடுகள்!’
ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் எல்லா அணிகளுமே இப்போது ‘Scouting Team’ என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். 5 லிருந்து 10 உறுப்பினர்களை கொண்ட அந்த Scouting குழு இந்தியா முழுவதும் பயணம் செய்யும். அதாவது, ஐ.பி.எல் நடக்காகல் இருக்கும் 10 மாதங்களும் இந்த பயணம் தொடரும்.

பிராந்திய ரீதியாக ஒவ்வொரு உறுப்பினர் ஒரு பிராந்தியத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அந்தந்த பிராந்தியங்களில் நடக்கும் உள்ளூர் போட்டிகளை அவர்கள் நேரில் சென்று பார்ப்பார்கள். உதாரணத்துக்கு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு போட்டி திண்டுக்கலில் நடக்கிறது. அங்கே ஆடும் அணியில் நமக்கு தேவையான வேலையை செய்யக்கூடிய இளம் வீரர்கள் ஆடுகிறார்கள் என தெரிந்தால் ‘Scouting’ குழுவை சேர்ந்த பிரதிநிதி அங்கே சென்றுவிடுவார்.
எந்த வீரரெல்லாம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறார்களோ அவர்களை பற்றிய ரிப்போர்டை போட்டியின் முடிவில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்புவார்கள். அங்கே ஒரு டீம் இந்த தகவல்களையெல்லாம் ‘Data’ வாக சேகரித்து வைத்துக் கொள்ளும். அவர்களின் டேட்டாவில் இருக்கும் வீரரை தொடர்ந்து ஃபாலோ செய்து அவர்களின் செயல்பாடுகளை பற்றிய மதிப்பீடுகளை சேகரித்துக் கொண்டே வருவார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த டேட்டாவிலிருந்து ஃபில்டர் செய்து தங்களுக்கு தேவையான வீரர்கள் என ஒரு பட்டியலை அளிப்பார்கள். அந்தப் பட்டியலில் உள்ள வீரர்கள் ‘Trials’ க்கு அழைக்கப்படுவார்கள். அங்கே ஒரு போட்டிக்கான சூழல் வீரருக்கு அசைன்மெண்ட்டாக கொடுக்கப்படும். அதாவது பௌலராக இருக்கும்பட்சத்தில், இத்தனை ஓவர்களில் இத்தனை ரன்களுக்குள் கொடுத்து இத்தனை விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படும். அதே பேட்டராக இருக்கும்பட்சத்தில் இத்தனை ஓவருக்குள் இத்தனை ரன்களை சேர்க்க வேண்டும் என்பார்கள்.
இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தங்களின் விருப்பப்பட்டியலில் வைத்துக் கொள்வார்கள். ஏலத்துக்கு சென்று அந்த வீரர்களை அணியில் எடுத்துவிடுவார்கள்.
‘பும்ரா டு அஸ்வனி குமார்!’
Scouting குழுவின் வேலை இதுதான். இப்படி ‘Scouting’ குழுவை வைத்து இளம் வீரர்களை தேடிப்பிடிக்கும் வேலையை மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதோ தொடங்கி விட்டது. பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா போன்ற ஸ்டார் வீரர்களையே மும்பை அணி தங்களின் ‘Scouting’ குழு வழியாகத்தான் கண்டறிந்து அணிக்குள் கொண்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜான் ரைட் தான் மும்பை அணியின் திறன் தேடும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.

அப்போது ஒரு உள்ளூர் போட்டியில் குறைந்த தூரமே ஓடி அதிக வேகத்தை ஜெனரேட் செய்த பும்ரா பார்த்து வியந்து, அவர்தான் மும்பை அணிக்குள் கொண்டு வந்தார். ஒவ்வொரு சீசனிலும் அதே மாதிரி இளம் வீரர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். திலக் வர்மா, நமன் தீர், நேஹல் வதேரா, அன்ஸூல் கம்போஜ் என கடந்த சீசன் வரைக்கும் தவறாமல் இளம் வீரர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
‘மும்பையின் தனித்துவம்!’
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மும்பை அணியின் திறன் தேடும் குழு வீரர்களை தேர்வு செய்யும் முறையே ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஏனெனில், அவர்கள் ரிசல்ட்டை பார்ப்பதே இல்லை. ஒரு பேட்டரோ பௌலரோ உள்ளூர் போட்டிகளில் ரன்கள் எடுத்தாலோ விக்கெட் எடுத்தாலோ மட்டும்தான் அவரை கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்றில்லை. மாறாக, ஒரு இளைஞரிடம் நல்ல திறமை இருக்கிறதென்பதை உணர்ந்தாலே அவரை தங்கள் முகாமுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.
விக்னேஷ் புத்தூரை அப்படித்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் அவருக்கு பெரிய ரெக்கார்டெல்லாம் இல்லை. விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில போட்டிகளில் மட்டும்தான் ஆடியிருக்கிறார். ஒரு சில விக்கெட்டுகளைத்தான் எடுத்திருக்கிறார்.
ஆனாலும் அவரிடம் திறமை இருக்கிறதென்பதை உணர்ந்த திறன் தேடும் குழு, அவரை தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SAT20 தொடருக்கு நெட் பௌலராக அழைத்துச் சென்று மெருகேற்றி ஏலத்தில் எடுத்தது. அஸ்வனி குமாரும் இதே பாணிதான். பஞ்சாபில் நடக்கும் டி20 லீகில் சொற்பப் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். சத்யா ஆந்திரா ப்ரீமியர் லீகில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும்தான் ஆடியிருக்கிறார். மும்பையின் ‘Scouting’குழுதான் தீவிரமாக வேலை பார்த்து இவர்களை அணிக்குள் கொண்டு வந்தது.

உள்ளூர் திறமைகளை கண்டறிந்து ஸ்டார்களாக வளர்த்துவிடும் இந்த பண்புக்காகவே மும்பை அணியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.!