புதுடெல்லி: அரபி கடல் பகுதியில் 2,500 கிலோ போதைப்பொருளை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது. இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
அரபிக் கடல் பகுதியில் போதைப்பொருளுடன் சில கப்பல்கள் பயணிப்பதாக மார்ச் 31-ம் தேதி எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரபி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் டர்கஷ் கப்பலில் இருந்த அதிகாரிகள், ஹெலிகாப்டர் மூலம் சந்தேகத்துக்கிடமான சில கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
இந்த கண்காணிப்புப் பணியில் கடற்படை கமாண்டோக்களும் ஈடுபட்டனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் ஒரு கப்பலை இடைமறித்து சோதனை நடத்தினர். அப்போது, 2,500 கிலோ போதொப்பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை கப்பலின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்தக் கப்பல் ஐஎன்எஸ் டர்கஷ் கப்பலின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதில் இருந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.