மதுரை: “ஆர்எஸ்எஸ் – பாஜகவின் வலுவான உறவால் மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறை சீர்குலைந்துள்ளது” என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டினார்.
மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசியது: “டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் உறுதியானதாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடு நடக்கிறது. நமது ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரம், போராட்டங்களை முடுக்கிவிட நாம் தயாராக இருக்கவேண்டும்.
மோடி அரசின் கீழ் 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. பெரிய நிறுவனங்களுக்கும், ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கும் இடையிலான உறவு இவ்வளவு வலுவாகவும், வெளிப்படையாகவும் இருந்ததில்லை. இதன் விளைவாக ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி முறை சீர்குலைந்துள்ளன. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்துப் போராடவும், தனிமைப்படுத்தவும், தோற்கடிக்கவும் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கவேண்டும்.
தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை எவ்வாறு விரிவுபடுத்துவது, தீவிரப்படுத்துவது மற்றும் தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இம்மாநாட்டில் விவாதித்து வழிகாட்டப்படும். இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பல்முனைப் போராட்டத்தை நடத்துவது மையமாக இருக்க வேண்டும்.
கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள், இளைஞர்களை அணிதிரட்டும் அரசியல் பாதையை செயல்படுத்த ஒரு வலுவான கட்சி அமைப்பு தேவை. பிற்போக்குத்தனமான சக்திகளைத் தோற்கடிப்பதற்கும் இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றைக் கட்டியெழுப்புவதற்கும் நடக்கும் போராட்டத்தில் இந்த 24-வது மாநாடு ஒரு மைல்கல்லாக இருக்கட்டும்”, என்று அவர் பேசினார்.