பெங்களூரு,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெறும் அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில், ஏற்கனவே லீக் சுற்றில் பெங்களூருவை வீழ்த்தி இருப்பதால் கோவா அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். ஆனால், உள்ளூர் சூழல் பெங்களூருவுக்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம்.
இதன் பின்னர் இவ்விரு அணிகளும் 6-ந்தேதி அரையிறுதியின் 2-வது சுற்றில் மீண்டும் சந்திக்கும். இரு ஆட்டத்தின் முடிவில் எந்த அணி அதிக வெற்றி பெறுகிறதோ? அல்லது சமனில் இருந்தால் எந்த அணி அதிக கோல்கள் அடிக்கிறதோ? அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
ஐ.எஸ்.எல். போட்டியில் பெங்களூரு – கோவா அணிகள் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 7-ல் பெங்களூருவும், 5-ல் கோவாவும் வெற்றி கண்டன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.