லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 69 ரன் எடுத்தார். இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்த போட்டியை பொறுத்தவரை நாங்கள் எடுத்த ரன்கள் நிச்சயமாக போதாது. நாங்கள் இந்த ஆட்டத்தில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். ஆனால், இது ஆட்டத்தின் ஒரு பகுதி நாங்கள் இன்னும் எங்கள் சொந்த மைதானத்தின் நிலைமையை மதிப்பிடுகிறோம். ஆரம்ப விக்கெட்டுகளை இழப்பது, ஒரு பெரிய இலக்கை அடைவதற்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கும்.
ஆனால், எங்கள் அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீரரும் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல கடினமாக உழைக்கிறார்கள். விக்கெட் எடுப்பது தான் யோசனை. இந்த ஆடுகளம் எங்களுக்கு மெதுவாக இருந்தது போல தோன்றியது. இந்த ஆடுகளத்தில் மெதுவான பந்துகள் போட்டியை மாற்றியதாக நினைக்கிறேன்.
எனவே, இந்த போட்டியில் இருந்து நாம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். இந்த ஆட்டத்தை பொருத்தவரை நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன தொடர்ந்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.